பேங்காக்: தாய்லாந்தில் ‘சைனைட்’ நஞ்சு மிக எளிதில் கிடைப்பதாக தடயவியல் மருத்துவர் ஒருவர் ஜூலை 18ஆம் தேதி கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மருத்துவரின் அடையாளம் வெளியிடப்படவில்லை.
‘சைனைட்’ எளிதில் கிடைப்பதாலும் தவறானவர்களை நம்புவதாலும் அந்த நஞ்சினால் மரணமடையும் போக்கு தாய்லாந்தில் அதிகரித்து வருவதற்கான காரணமாக இருக்கக்கூடும் என்று அந்த மருத்துவர் தெரிவித்தார்.
அண்மையில் ‘சைனைட்’ தொடர்பான இரண்டு வழக்குகள் தாய்லாந்தில் பெரும் அளவில் பேசப்பட்டு வருகிறது.
அதில் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவந்த செய்தியும் ஒன்று.
அது ‘சைனைட்’ நஞ்சைப் பயன்படுத்தி 14 பேரைக் கொன்ற பெண்ணைப் பற்றியது.
சராரட் ரங்சிவுதாபோர்ன் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.
இது ஒருபுறம் இருக்க, 2024ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதியன்று தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் உள்ள கிராண்ட் ஹயாட் இராவான் ஹோட்டலில் உள்ள அறை ஒன்றில் ஆறு பேர் மாண்டு கிடந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
மாண்டவர்களில் மூவர் பெண்கள், மூவர் ஆண்கள்.
அவர்கள் அனைவரும் வியட்னாமியர்கள்.
அவர்களில் இருவர் அமெரிக்காவைச் சேர்ந்த வியட்னாமிய வம்சாவளியினர்.
அந்த ஆறு பேரின் மரணத்துக்குக் காரணம் ‘சைனைட்’ என்று உடற்கூராய்வில் தெரியவந்தது.
அவர்கள் சாப்பிட்ட உணவு அல்லது அருந்திய பானத்தில் அந்த நஞ்சு கலக்கப்பட்டிருக்கக்கூடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
‘சைனைட்’, தாய்லாந்தில் கட்டுப்படுத்தப்பட்ட ரசாயனமாக இருந்தாலும் பாம்பு, உடும்பு ஆகியவற்றுக்கு எதிராக அவை பயன்படுத்தப்படுவதால் அது எளிதாகக் கிடைக்கிறது.
இருப்பினும், அபாயகரமான ரசாயனங்கள் தொடர்பான சட்டத்தின்கீழ் ‘சைனைட்’ நஞ்சை உற்பத்தி செய்வது, இறக்குமதி செய்வது, ஏற்றுமதி செய்வது, அதை வைத்திருப்பது நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை, 200,000 பாட் (S$7,500) அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

