தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கம்போடியாவில் அரிய வகைசியாமிய முதலைகள்குஞ்சு பொரித்த அதிசயம்

2 mins read
ff0489be-676e-4394-bf45-2f4535b611df
ஜூலை 18ஆம் தேதி வெளியிடப்பட்ட படத்தில் சியாமிய முதலைக் குஞ்சு இருப்பதைக் காட்டுகிறது. - படம்: ஏஎஃப்பி

நோம்பென்: உலகில் அருகி வரும் சியாமிய முதலைகள் அரிய வகையில் கம்போடியாவில் குஞ்சு பொரித்துள்ளன.

இது, உலகின் ஆபத்தான ஊர்வனங்களை அழியாமல் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது என்று ஜூலை 18ஆம் தேதி விலங்குநல ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

கம்போடியாவின் தேசிய ஏலக்காய் பூங்காவில் மே மாத மத்தியில் ஐந்து சியாமிய முதலைகளின் கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டதாக விலங்குநல அமைப்பான ஃபானா அண்ட் ஃபுளோராவும் சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் அமைச்சும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன.

கூடுகளில் 106 முட்டைகள் இருந்தன. ஜூன் 27 முதல் ஜூன் 30 வரை, அவற்றில் 60 முட்டைகளில் இருந்து வெற்றிகரமாக குஞ்சுகள் வெளிவந்தன என்று அமைச்சு குறிப்பிட்டது.

“இயற்கையாக முதலைகளின் முக்கிய வாழ்விடமாக இந்த கண்டுபிடிப்பு உள்ளது. இது, அரியவகை உயிரினங்கள் மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியிருக்கிறது,” என்று அறிக்கையில் இரு அமைப்புகளும் தெரிவித்தன.

கம்போடியா காடுகளில் ஏறக்குறைய 300 சியாமிய முதலை உயிரினங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுடன் சேர்த்து உலகம் முழுவதும் மொத்தம் 1,000 சியாமிய முதலைகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இப்பகுதியைச் சுற்றியுள்ள முதலைப் பண்ணைகளுக்கு முட்டை மற்றும் வளர்ந்த ஊர்வனவற்றை விநியோகிக்கும் வேட்டைக் காரர்களால் சியாமிய முதலைகளுக்கு ஆபத்து ஏற்படுகிறது. அவற்றின் தோல்கள், ஆடம்பர கைப்பைகள், காலணிகள் மற்றும் இடுப்புவார் போன்றவற்றை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

இதற்கிடையே கம்போடியாவின் சுற்றுச்சூழல் அமைச்சரான இயாங் சோஃபால்லெத், பல்லுயிர்களைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சிகளால் உலகின் சில அரிய வகை உயிரினங்களின் தாயகமாக கம்போடியா இருப்பது பெருமையளிக்கிறது என்றார்.

ஆசியாவின் ஏழ்மையான, ஊழல் நிறைந்த நாடுகளில் ஒன்றான கம்போடியாவில் காடுகளை அழிப்பது, வேட்டையாடுதல் ஆகியவற்றால் பல அரிய வகை உயிரினங்கள் அழிந்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்