தைபே: சீனாவின் அச்சுறுத்தலைச் சமாளிக்கத் தைவான், தன் ராணுவத்திற்குச் செலவிடும் செலவீனங்களை அதிகரித்து அதை நவீனப்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் லின் சியா லுங் வெள்ளிக்கிழமை (ஜூலை19) தெரிவித்தார்.
தைவான் தனது தற்காப்புக்கு அதையே சார்ந்து இருப்பதாகவும் திரு டிரம்ப் தைவான்மீது வைத்த விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அவர் கூறினார்.
தைவானின் தற்காப்புக்கு ஆகும் செலவை அந்நாடு ஏற்க வேண்டும் எனக் குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டோனல்ட் டிரம்ப் இந்த வாரம் வெளியீடு கண்ட நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார்.
மேலும், அமெரிக்காவின் குறைக்கடத்தி வர்த்தகத்தை அந்நாடு பறித்துகொண்டதாகவும் திரு டிரம்ப் விமர்சித்தார்.
அமெரிக்கா தைவானின் முக்கிய நட்பு நாடாகவும் அந்நாட்டுக்கு ஆயுத விற்பனை செய்யும் நாடாகவும் விளங்கி வருகிறது. அமெரிக்காவுக்கும் தைவானுக்கும் இடையே எந்தவொரு அரசதந்திர உறவு இல்லையென்றாலும் இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் உடன்படிக்கையின்படி, தைவானின் தற்காப்புக்கு உதவ வேண்டியது அமெரிக்காவின் கடமை எனக் கூறப்படுகிறது.
தைவான்மீது சீனா படையெடுத்தால் அமெரிக்கப் படைகள் தைவானைப் பாதுகாக்கும் என 2022ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளும் பரஸ்பர பலனளிக்கும் உறவை கொண்டுள்ளதாகவும் அமெரிக்காவுடன் இருக்கும் உறவை நாங்கள் போற்றுவதாகவும் திரு டிரம்பின் கருத்துகள் குறித்து வெளிநாட்டுச் செய்தியாளர்களிடம் பேசியபோது திரு லின் கூறினார்.
“தைவானுக்குச் சீனா அச்சுறுத்தலாக இருக்கிறது என்ற விவகாரத்தில் அனைவருக்கும் ஒருமித்த கருத்து இருப்பதாக நான் நினைக்கிறேன். உண்மையில் தேசத் தற்காப்பில், நாம் நம்மையே சார்ந்து இருக்க வேண்டும்,”என்றார் திரு லின்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 30 ஆண்டுகளாகத் தைவானில் ஜனநாயகக் கொள்கைகளை நிலைநிறுத்தத் தொடங்கியதில் இருந்து, சீனாவின் அச்சுறுத்தலுக்கு எதிராக நாங்கள் தனித்து நின்று போராடி வருகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

