பாரிஸ்: பாரிஸ் நகரில் கடைத் தொகுதிகள் இருக்கும் பிரபலமான இடமான ‘ஷோன்செலிசே’ பகுதியில் வியாழக்கிழமை (ஜூலை 18) கத்தியால் ஒருவர் தாக்கியதில் காவல்துறை அதிகாரி ஒருவர் படுகாயம் அடைந்தார்.
ஒரு நவீன அணிகலன் விற்கும் கடையில் இருந்த பாதுகாவலர் ஒருவர், கத்தியுடன் ஒருவர் இருப்பதைக் கண்டு காவல் துறைக்குத் தகவல் கொடுத்தார் என்று பாரிஸ் நகர காவல்துறைத் தலைவர் லாரென்ட் நுனெஸ் தெரிவித்தார்.
தாக்கியவரும் காயம் அடைந்ததாக அவர் சொன்னார்.
பாரிஸ் நகரில் கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுகள் ஜூலை 26ஆம் தேதி தொடங்குகின்றன.
இதையொட்டி விளையாட்டு வீரர்கள், உலகத் தலைவர்கள் உட்பட மில்லியன் கணக்கானவர்கள் பாரிஸ் நகருக்கு வருகின்றனர். இதனால் அந்நகரம் பலத்த பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ‘ஷோன்செலிசே’ பகுதியைத் தவிர்க்குமாறு பொதுமக்களை காவல்துறை கேட்டுக் கொண்டது.
பிரபலமான அந்த வட்டாரத்தை காவல்துறை அதிகாரிகள் தடுப்புகள் போட்டு மூடியுள்ளதை தொலைக்காட்சி படங்களில் காண முடிந்தது.
இவ்வாரம் பிரான்ஸ் தலைநகரில் அடுத்தடுத்து நடந்துள்ள தாக்குதல்களில் இது அண்மைய சம்பவமாகும்.
தொடர்புடைய செய்திகள்
இம்மாதம் 15ஆம் தேதி ரயில் நிலையத்தில் ஒருவன் கத்தியால் தாக்கியதில் ராணுவ வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.
ஜூலை 17ஆம் தேதி காப்பிக் கடை மீது கார் மோதிய சம்பவத்தை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.