தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கொலைமுயற்சியை நினைவுகூர்ந்த டிரம்ப்

2 mins read
507c4b03-efb0-4d72-8e42-45fd14acf5e7
விஸ்கான்சின் மாநிலத்தில் நடைபெற்ற குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் தமது குடும்பத்தினருடன் கலந்துகொண்ட டோனல்ட் டிரம்ப். - படம்: இபிஏ

மில்வாக்கி: டோனல்ட் டிரம்ப் கடந்த வாரம் தம்மைக் கொலை செய்ய நடந்த முயற்சி குறித்து குடியரசு கட்சி மாநாட்டில் விவரித்து உள்ளார்.

டிரம்ப் அந்த சம்பவத்தை பரபரப்பாகக் காணப்பட்ட கூட்டத்தினரிடம் விளக்கினார்.

“கடவுளின் கருணையால் தான் நான் தாக்குதலில் இருந்து தப்பித்து இங்கு நிற்கிறேன்,” என்று மிகவும் உணர்ச்சிபூர்வமாக அவர் குறிப்பிட்டார்.

“பலத்த சத்தத்தைக் கேட்டு என்னை ஏதோ தாக்கியது என்பதை உணர்ந்தேன். உண்மையிலேயே எனது வலது காதில் அது தாக்கியது. தாக்கியது என்னவாக இருக்கும்? ஒருவேளை துப்பாக்கிக் குண்டாக இருக்குமோ என்று எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன்,” என்று டிரம்ப் கூறினார்.

தொடர்ந்து, விஸ்கான்சின் மாநிலத்தின் மில்வாக்கி நகரில் கூடியிருந்தவர்களை நோக்கி “நான் இங்கு இருந்திருக்க மாட்டேன்,” என்றார், உடனடியாக கூட்டத்தினர், “நீங்கள் வந்துவிட்டீர்கள்,” என்று உரக்கக் கத்தி பதிலுரைத்தனர்.

கடந்த சனிக்கிழமை தம்மை நோக்கி துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்தை 14 நிமிடம் விவரித்த டிரம்ப், தமது வலது காதில் கட்டுடன் காணப்பட்டார்.

அவருக்குப் பின்னால் இருந்த திரையில் டிரம்ப் ரத்தம் சொட்ட சொட்ட காணப்படும் புகைப்படம் காண்பிக்கப்பட்டது. அதனைப் பார்த்த டிரம்ப், சம்பவத்தின்போது தம்மைப் பாதுகாத்த காவல்துறையின் ரகசியப் பிரிவு அதிகாரிகளைப் பாராட்டினார்.

அத்துடன், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தீணையப்பாளர் கோரி கம்பேரட்டோரின் துணிச்சலைப் பாராட்டி, சம்பவத்தின்போது அவர் அணிந்திருந்த தலைக்கவசத்திற்கு முத்தமிட்டு நன்றி செலுத்தினார்.

முன்னாள் அதிபரான டிரம்ப், 78, நவம்பரில் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் வேட்பாளர் நியமனத்தை முறைப்படி ஏற்றுக்கொண்டார்.

“அமெரிக்காவின் பாதிப் பகுதிக்கு மட்டுமல்ல; எல்லா அமெரிக்க மக்களுக்கும் அதிபராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் போட்டியிடுகிறேன். பாதி அமெரிக்காவை வெல்வது வெற்றி ஆகாது,” என்று தமது உரையில் டிரம்ப் குறிப்பிட்டார்.

உடனடியாக, தமது உரையை அதிபர் பைடனுக்கு எதிராகத் திருப்பிய அவர், பைடன் நிர்வாகம் அமெரிக்காவை சீரழித்து வருகிறது என்றார்.

தம் மீது தொடுக்கப்பட்டு இருக்கும் குற்றவியல் வழக்குகள் ஜனநாயகக் கட்சியின் சதிவேலை என்று டிரம்ப் குற்றம் சாட்டினார்.

குறிப்புச் சொற்கள்