டெல் அவிவ் நகரில் குண்டுவெடிப்பு; ஹிஸ்புல்லாவின் கைவரிசையா என விசாரணை

1 mins read
df3f6317-01e5-4e5d-a7af-25a7c6454417
வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் கண்ணாடிகள் சிதறிக் கிடக்கின்றன. - படம்: இபிஏ

டெல் அவிவ்: டெல் அவிவ் நகரத்தின் மத்தியில் ஜூலை 19 விடியற்காலை குண்டு வீசி தாக்கப்பட்டதால் இஸ்ரேலிய ராணுவம் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.

டிரோன் மூலம் அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று ராணுவம் வெளிப்படையாகச் சந்தேகிக்கிறது.

ஆனால் இந்தத் தாக்குதல் குறித்து எச்சரிக்கையொலி எதுவும் எழுப்படப்படவில்லை.

தெற்கு லெபனானில் ஈரான் ஆதரவில் செயல்படும் ஹிஸ்புல்லா போராளி அமைப்பின் மூத்த தளபதி ஒருவரைக் கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய ராணுவம் அறிவித்தவுடன் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் ஹிஸ்புல்லாவின் கைவரிசையாக இது இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

“ஆகாயத்திலிருந்து குண்டுகள் வீசப்பட்டிருக்கலாம் என்பது ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. இது குறித்து மக்களை எச்சரிக்கும் ஒலி ஒலிக்கப்படவில்லை. இந்தச் சம்பவத்தை முழுமையாக விசாரித்து வருகிறோம்,” என்று ராணுவத்தின் அறிக்கை தெரிவித்தது.

இஸ்ரேலின் ஆகாயவெளியைப் பாதுகாக்க ஆகாய சுற்றுக் காவல் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அது கூறியது.

ஹிஸ்புல்லா போன்று ஈரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹூதி போராளிகளின் ராணுவப் பேச்சாளர், டெல் அவிவை குறிவைத்த ராணுவ நடவடிக்கை பற்றிய விவரங்களை அக்குழு வெளிப்படுத்தும் என்று ‘எக்ஸ்’ பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

வெடிப்பு நிகழ்ந்த இடத்துக்கு அருகே உள்ள அடுக்குமாடி வீட்டில் ஓர் ஆடவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. அவரது மரணத்துக்கான சூழ்நிலை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

குறிப்புச் சொற்கள்