வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலிலிருந்து அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் விலகியுள்ளார்.
தமக்குப் பதிலாக தேர்தலில் ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை அவர் முன்மொழிந்துள்ளார்.
ஜனநாயகக் கட்சி சார்பாக பைடனுக்குப் பதிலாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட கமலா ஹாரிசுக்கு அக்கட்சியைச் சேர்ந்த பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கலிஃபோர்னியா ஆளுநர் கெவின் நியூசம், கொலராடோ ஆளுநர் ஜெரட் பொலிஸ், நார்த் கரோலைனா ஆளுநர் ரோய் கூப்பர், பென்சில்வேனியா ஆளுநர் ஜாஷ் ஷபிரோ, அரிசோனா செனட்டர் மார்க் கெலி, வாஷிங்டன் செனட்டர் பெட்டி மரே, சவுத் கரோலைனா நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் கிலைபர்ன், மசசூசட்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரமிளா ஜெயபால் ஆகியோர் கமலா ஹாரிசுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்டனும் அவரது மனைவியும் முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சருமான ஹில்லரி கிளன்டனும் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆனால் முன்னாள் செனட் சபை நாயகர் நேன்சி பெலோசி, முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உட்பட ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மௌனம் காத்து வருகின்றனர்.
கமலா ஹாரிசால் டிரம்ப்பை வீழ்த்த முடியுமா என்ற சந்தேகம் ஜனநாயகக் கட்சிக்குள் மேலோங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
81 வயது பைடன், கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் அவரது அதிபர் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.
அதுவரை அமெரிக்காவின் அதிபராகத் தாம் தொடர இருப்பதாக எக்ஸ் தளத்தில் பைடன் பதிவிட்டார்.
அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைப் பிரதிநிதித்து முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.
டிரம்ப்பிற்கு எதிரான விவாதத்தில் பைடன் மிகவும் மோசமாகச் செயல்பட்டதை அடுத்து, தேர்தலிலிருந்து அவர் விலக வேண்டும் என்று அவரது சொந்த கட்சியிலிருந்து குரல்கள் எழுந்தன.
அவர் மீதான அதிருப்திநிலை நாளுக்கு நாள் வலுவடைந்தது.
பைடன் தொடர்ந்து போட்டியிட்டால் டிரம்ப் வெற்றி பெறுவது உறுதி என்று பரவலாகப் பேசப்பட்டது.
இந்த எதிர்ப்புகளையும் மீறி தேர்தலில் தாம் களமிறங்குவது உறுதி என்று விட்டுக்கொடுக்காமல் உறுதியுடன் இருந்த பைடன் இறுதியில் தேர்தலிலிருந்து விலகியுள்ளார்.
தேர்தலிலிருந்து விலகுவதாக பைடன் அறிவித்ததை அடுத்து, அதுகுறித்து டிரம்ப் கருத்து தெரிவித்தார்.
பைடனைக் காட்டிலும் கமலா ஹாரிசைத் தோற்கடிப்பது எளிது என்று அவர் சிஎன்என் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக 59 வயது கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் கறுப்பினப் பெண் எனும் பெருமை அவரைச் சேரும்.
59 வயது கமலா ஹாரிசின் தந்தை ஜமைக்காவைச் சேர்ந்த கறுப்பினத்தவர்.
அவரது தாயாரான சியாமளா கோபாலன் இந்தியாவைச் சேர்ந்தவர்.
கமலா ஹாரிசின் கணவர் ஒரு யூதர்.
கமலா ஹாரிஸ் சட்டத்துறையில் பட்டம் பெற்றவர்.
அவர் 1990ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவின் ஓக்லேண்ட் நகரில் துணைத் தலைமைச் சட்ட அதிகாரியாக தமது பணியைத் தொடங்கினார்.
அப்போது அவர் பல குடும்ப வன்முறை, சிறார் துன்புறுத்தல் வழக்குகளைக் கையாண்டார்.
“தேர்தலில் ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதிப்பதே எனது இலக்கு. ஜனநாயகக் கட்சியினர் அனைவரையும் அமெரிக்கர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து டோனல்ட் டிரம்ப்பை வீழ்த்த என்னால் ஆன அனைத்தையும் செய்வேன்,” என்று கலிஃபோர்னியாவின் முன்னாள் தலைமைச் சட்ட அதிகாரியும் முன்னாள் செனட்டருமான கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.