தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சீனாவின் ஐந்து ஆண்டு பொருளியல் சீர்திருத்தம்; புத்தாக்க தொழில்நுட்பத்துக்கு முக்கிய இடம்

2 mins read
ded89d4e-81ec-434b-bdee-98b53d39a046
சீன கம்யூனிசக் கட்சியின் மாநாட்டில் அதிபர் ஸி ஜின்பிங் உரையாற்றுவதை மின்திரைக் காட்டுகிறது. சீனாவின் சீர்திருத்தங்களில் புத்தாக்கத்துக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

பெய்ஜிங்/சிங்கப்பூர்: சீனா, அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தவுள்ள மாபெரும் சீர்திருத்தத் திட்டங்களுக்கான அரசியல் ஆவணத்தை வெளியிட்டுள்ளது. இது, இன்னும் நிலையான புத்தாக்கத்தைச் சார்ந்த பொருளியல் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

பொருளியல் மற்றும் புவிசார் அரசியல் பிரச்சினைகளுக்கு இடையே தனது ஆகப்பெரிய சீர்திருத்தத் திட்டங்களை சீன அரசாங்கம் முன்வைத்துள்ளது.

ஜூலை 15 முதல் 18 வரை நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் 3வது நாள் கூட்டத்தில் சுமார் 300 சீர்திருத்த நடவடிக்கைகளுக்கான ஆவணம் வெளியிடப்பட்டது.

அடுத்து வரும் ஆண்டுகளில் பரந்த அளவில் அமல்படுத்த வேண்டிய பொருளியல் அரசியல் நடவடிக்கைகள் அதில் இடம்பெற்றுள்ளன.

தொழிற்சாலை மேம்பாடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் புத்தாக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ‘புதிய தரமான உற்பத்தி’ என்ற தாரக மந்திரத்தை 2023ஆம் ஆண்டில் அதிபர் ஸி ஜின்பிங் முன்மொழிந்தார். அந்த தேசிய இயக்கத்தை ஆதரிக்கும் பல நடவடிக்கைகளில் சீர்திருத்தங்கள் முக்கிய கவனம் செலுத்துகின்றன.

ஜூலை 21ஆம் தேதி வெளியிடப்பட்ட 22,000க்கும் மேற்பட்ட வார்த்தைகள் அடங்கிய ஆவணம், உத்திபூர்வ தொழில்களில் திறன்களை மேம்படுத்துவதற்கான கல்வி முறைச் சீர்திருத்தங்கள், வெளிநாட்டுத் திறனாளர்களை ஈர்க்கும் திட்டத்தில் மேம்பாடு மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்களுக்கு இடையே தொடர்பை வலுப்படுத்துவது ஆகியவற்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஆய்வு முயற்சிகள் மற்றும் இதுபோன்ற முயற்சிகளை தடையின்றி வணிகமயமாக்குவதையும் இது கவனம் செலுத்துகிறது.

மேலும் புத்தாக்கத்திற்கு மத்திய, மாநில அரசுகளுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆற்ற வேண்டிய பங்குகளை ஆவணம் பட்டியலிட்டுள்ளது.

அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனங்கள் உண்மையான புத்தாகத்தை மேம்படுத்தும் வகையில் சிறந்த மேம்பட்ட வசதிகளைக் கொண்டிருக்கும்.

அதே சமயத்தில் ஆற்றல்வாய்ந்த தனியார் நிறுவனங்கள் நாட்டின் முக்கிய தொழில்நுட்பப் பணிகளில் முன்னணி வகிக்கவும் தேசிய அறிவியல் ஆய்வக உள்கட்டமைப்பு வசதிகளை அதிக அளவில் பயன்படுத்தவும் அரசாங்கம் ஆதரவு அளிக்கும் என்று ஆவணம் தெரிவித்தது.

சீர்திருத்தங்கள் பற்றி விளக்கிப் பேசிய அதிபர் ஸி ஜின்பிங், சீனாவின் புத்தாக்க ஆற்றல் தற்போதைய உயர்தர வளர்ச்சிக்குத் தேவையானதைவிட குறைவாக இருப்பதால் இவை அவசியம் என்று தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்