200,000 பேர் துன்புறுத்தப்பட்டனர்;மன்னிப்பு கேட்கிறது நியூசிலாந்து

200,000 பேர் துன்புறுத்தப்பட்டனர்;மன்னிப்பு கேட்கிறது நியூசிலாந்து

2 mins read
8f0d35b9-3cd7-4480-a9bd-91aa6c235653
துன்புறுத்தல்கள் குறித்து நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ்டஃபர் லக்சன் வருத்தம் தெரிவித்தார். - படம்: ஏஎஃப்பி

வெலிங்டன்: நியூசிலாந்தில் உள்ள அரசாங்கம் மற்றும் சமய அமைப்புகளுக்குச் சொந்தமான பராமரிப்பு நிலையங்களில் கடந்த 70 ஆண்டுகளாக ஏறத்தாழ 200,000 பேர் துன்புறுத்தல்களுக்கு ஆளானது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் சிறுவர்களும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய முதியோரும் அடங்குவர்.

இந்த விவகாரம் குறித்து நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ்டஃபர் லக்சன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 12ஆம் தேதியன்று நியூசிலாந்து அரசு அதிகாரபூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்ளும் என்று பிரதமர் லக்சன் கூறினார்.

1950ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரை பராமரிப்பு இல்லங்களில் இருந்த மூன்றில் ஒரு சிறுவர்கள் அல்லது முதியவர்கள் ஏதேனும் ஒரு வழியில் துன்புறுத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

நியூலாந்தில் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டு வந்த 2,300க்கும் மேற்பட்டோரிடம் அந்நாட்டின் அரச ஆணையம் விசாரணை நடத்தி இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டது.

அரசாங்கத்துக்குச் சொந்தமான பராமரிப்பு நிலையங்கள், சமய அமைப்புகளுக்குச் சொந்தமான பராமரிப்பு நிலையங்கள் ஆகியவற்றில் பாலியல் வன்கொடுமை, கருத்தடை செய்வது, மின்சாரம் பாய்ச்சி துன்புறுத்துவது போன்ற கொடுமைகள் நடந்ததாகத் தெரியவந்துள்ளது.

நியூசிலாந்தின் பழங்குடியினரான மௌரி இனத்தவர்கள் பலர் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக அறிக்கை குறிப்பிட்டது.

மனநல பாதிக்கப்பட்டவர்களும் உடற்குறையுள்ளவர்களும் துன்புறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

துன்புறுத்தல்கள் குறித்து யாருக்கும் தெரிய வராதபடி அவற்றை அரசாங்கத் தலைவர்களும் சமயத் தலைவர்களும் மூடி மறைத்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

துன்புறுத்தியவர்களுக்குத் தண்டனை விதிக்கப்படவில்லை. மாறாக, அவர்கள் வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களில் பலர் நியாயம் கிடைக்காமலேயே இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கும் வகையில் விசாரணைக் குழு 138 பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

நியூசிலாந்து அரசும் போப்பாண்டவரும் கென்டர்பரி பேராயரும் மன்னிப்புக் கேட்பது அவற்றில் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்