இரண்டாவது நாளாக உலகம் சூடானது

2 mins read
b2559089-a759-4eb5-84b7-28eafaee3495
உலகம், தொடர்ந்து 2வது நாளாக ஜூலை 22ஆம் தேதி இதுவரை இல்லாத அளவு சூடானது. - ஏஎஃப்பி

லண்டன்: உலகம், இதுவரை இல்லாத அளவுக்கு சூடாகியிருக்கிறது. அதாவது, ஜூலை 22ஆம் தேதி (திங்கட்கிழமை) உலகின் ஆக வெப்பமான 2வது நாளாக பதிவாகியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு முகவையின் ஆரம்பக்கட்ட தகவல்களிலிருந்து இது தெரிய வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) முதல் நாளாக ஆக வெப்பமாக இருந்ததை அது சுட்டிக்காட்டியுள்ளது.

உலகின் சராசரி வெப்பமும் 17.15 டிகிரி செல்சியசுக்கு அதிகரித்துள்ளது என்று கோப்பெர்நிக்கஸ் என்ற அந்த பருவநிலை கண்காணிப்பு அமைப்பு கூறியது. இந்த அமைப்பு, 1940களிலிருந்து உலக வெப்பத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்து வருகிறது.

இதற்கு முன்பு 2023ஆம் ஆண்டு ஜூலையில் நான்கு நாள் தொடர்ந்து அதிக வெப்பமாக இருந்தது. இது, 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு பதிவான ஆக வெப்பமான நாட்களாகும்.

“கடந்த திங்கட்கிழமை (ஜூலை 22), இதுவரை இல்லாத சாதனையாக உலகின் ஆக சூடான நாளாக இருக்கலாம்,” என்று ஜெர்மனியில் லெய்ப்ஸிக் பல்கலைக் கழகத்தில் பேசிய பருவநிலை அறிவியலாளர் கார்ஸ்டென் ஹாஸ்டெய்ன் குறிப்பிட்டார்.

அண்மைய நாட்களாக ஜப்பான், இந்தோனீசியா, சீனா ஆகிய நாடுகளின் நகரங்களிலும் அதிக வெப்பம் பதிவாகியுள்ளன. வளைகுடா நாடுகளும் இதிலிருந்து தப்பவில்லை. அங்கும் ஈரப்பதம் 60 டிகிரி செல்சியசைத் தாண்டியது. இதற்கிடையே ஐரோப்பிய நாடுகளின் பல பகுதிகளிலும் வெப்பம் 45 டிகிரி செல்சியசைக் கடந்துள்ளது.

புதைபடிம எரிபொருள் எரிக்கப்படுவதே பருவநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணம் என்று அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். கடந்த ஆண்டின் பருவ நிலை மாற்றத்தில் எல்நினோவும் சேர்ந்துகொண்டது. ஆனால் ஜூலையில் பதிவான ஆக வெப்பமான நாளில் அத்தகைய சூழல் ஏற்படவில்லை.

குறிப்புச் சொற்கள்