பெட்டாலிங் ஜெயா: இணையம் வழி துன்புறுத்தலை எதிர்கொள்ளவும் அத்தகைய சம்பவங்களைத் தடுக்கவும் அவை தொடர்பான சட்டங்களை மலேசியா கடுமையாக்க இலக்கு கொண்டிருப்பதாக அந்நாட்டின் மின்னிலக்கத்துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.
மொழி சார்ந்த தடைக்கற்கள் இருந்தாலும் இணையம் வழி துன்புறுத்தல்களை எதிர்கொள்ள, சமூக ஊடகங்கள் கூடுதல் பொறுப்பு ஏற்க வேண்டி வரும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
“மற்றவர்களுடன் தொடர்புகொள்ள ஒரு தளத்தை அமைத்துக் கொடுக்கும்போது பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தருவதற்குத் தேவையான அம்சங்கள் இருப்பதை உறுதி செய்வது அவசியம்,” என்று ஜூலை 27ஆம் தேதியன்று தி ஸ்டார் நாளிதழிடம் பேட்டியளித்த அமைச்சர் கோபிந்த் கூறினார்.
இணையம் வழி துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட ‘ஈஷா’ என்று அழைக்கப்பட்ட ராஜேஸ்வரி அப்பாஹு ஜூலை 5ஆம் தேதி உயிரை மாய்த்துக்கொண்டார்.
குமாரி ராஜேஸ்வரி, சமூக ஊடகப் பிரபலமாகவும் தன்னார்வலராகவும் இந்து சமய ஆர்வலராகவும் இருந்தார்.
அவருக்கு எதிராக சமூக ஊடகம் வாயிலாகத் தமிழ்மொழியில் மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகவும் அவரை இழிவுப்படுத்தும் வகையில் அவரைச் சிலர் தமிழில் வசைபாடியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக இரண்டு டிக்டோக் கணக்குகளை மலேசியக் காவல்துறை விசாரணை நடத்தியது.
சமூக ஊடகத்தைப் பயன்படுத்துபவர்கள் எந்த மொழியில் பேசினாலும் அல்லது தட்டச்சு செய்தாலும் அதற்கான பாதுகாப்பு அம்சங்களுக்கு அந்தத் தளங்களை ஏற்று நடத்துவோர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார் திரு கோபிந்த்.
தொடர்புடைய செய்திகள்
“தங்கள் தளங்களில் உரையாடல்களை அனுமதிப்பதற்கு முன்பு தளங்களை ஏற்று நடத்துவோர் மொழி சார்ந்த இடையூறுகளைப் பற்றி முதலிலேயே நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால்தான் இப்படிப்பட்ட ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
“மொழி புரியவில்லை. அதைப் புரிந்துகொள்வதற்கான சாதனங்கள் தங்களிடம் இல்லை என்று கூறிவிட்டு வெறும் மன்னிப்பு கேட்டுவிட்டு அவர்கள் சென்றுவிட முடியாது.
“தங்கள் தளங்களைப் பயன்படுத்த மக்களுக்கு அழைப்பு விடுப்பதற்கு முன்பு பாதுகாப்பு அம்சங்களை அவர்கள் உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினை ஏற்படும் சாத்தியங்கள் உள்ளன,” என்று திரு கோபிந்த் தெரிவித்தார்.
இத்தகைய விவகாரம் ஏற்படும்போதெல்லாம் சமூக ஊடகத் தளங்களிடமிருந்து வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புணர்வையும் அரசாங்கம் எப்போதும் எதிர்பார்க்க வேண்டும் என்று வழக்கறிஞருமான அமைச்சர் கோபிந்த் கூறினார்.
குமாரி ராஜேஸ்வரியின் மரணத்தைத் தொடர்ந்து, தமிழ் உட்பட அனைத்து மொழிகளிலும் நடத்தப்படும் உரையாடல்கள், பதிவேற்றங்கள், நேரடி ஒளிபரப்புகள் ஆகியவற்றைக் கண்காணிக்கும் அம்சங்களை டிக்டோக் அதிகரித்திருப்பதாக மலேசியாவின் தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி ஃபாட்சில் ஜூலை 18ஆம் தேதியன்று தெரிவித்தார்.