கோலாலம்பூர்: நடப்பில் இருக்கும் இணையம் வழி துன்புறுத்தல் தடுப்புக் கொள்கைகளை முதலாளிகள் துரிதமான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மலேசிய முதலாளிகள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
இணையம் வழி துன்புறுத்தல் பல வடிவில் இருப்பதாக சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் சயீது உசேன் சயீது உஸ்மான் தெரிவித்தார்.
வேலையிடத் துன்புறுத்தல்கள் தற்போது இணையம் வழி துன்புறுத்தலுக்கு விரிவடைந்திருப்பதாக அவர் கூறினார்.
எனவே, பாதுகாப்பான வேலைச் சூழலை ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஏற்படுத்தித் தருவது முதலாளிகளின் முக்கிய பொறுப்புகளில் ஒன்று என்றார் அவர்.
“இணையத் துன்புறுத்தல் தொடர்பான அறிகுறிகளை அடையாளம் கண்டு, தக்க நடவடிக்கை எடுக்கும்படி மேலாளர்களையும் மேற்பார்வையாளர்களையும் கேட்டுக்கொள்கிறோம். இணையத் துன்புறுத்தலுடன் பாலியல் துன்புறுத்தலும் ஏற்பட்டால் சட்டத்துக்கும் நிறுவனத்தின் விதிமுறைகளுக்கும் கட்டுப்பட்டு முதலாளிகள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
“விசாரணை நடத்துவது, விசாரணை மூலம் கிடைக்கும் தகவல்களைக் கொண்டு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகியவை இதில் அடங்கும். ஊழியர் செய்யும் தவற்றின் தீவிரத்தைப் பொறுத்து ஆலோசனை வழங்குவது, செய்த தவற்றைத் திருத்திக்கொள்ள உத்தரவிடுவது, பணி நீக்கம் செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுக்கலாம்,” என்று ஜூலை 30ஆம் தேதி சம்மேளனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
வேலையிடத்தில் ஊழியர்கள் இணையம் வழி துன்புறுத்தலுக்கு ஆளாகும்போது அவர்[Ϟ]களுக்குப் பதற்றம், மன அழுத்தம் போன்றவை ஏற்படக்கூடும் என்றும் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாவிடில், மோசமான விளைவுகள் ஏற்படக்கூடும் என்றும் திரு சயீது உசேன் கூறினார்.
இணையம் வழி துன்புறுத்தல் காரணமாக ஜூலை 5ஆம் தேதியன்று மலேசியாவில் பெண் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
‘ஈஷா’ என்று அழைக்கப்பட்ட குமார் ராஜேஸ்வரி அப்பாஹு தமது வீட்டில் மாண்டு கிடந்தார்.
இதையடுத்து, மலேசியாவில் இணையம் வழி துன்புறுத்தலுக்கு எதிரான சட்டங்களைக் கடுமையாக்க மலேசிய அரசாங்கம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.