தைப்பே: கடந்த பிப்ரவரி மாதம் தைவான் கடற்பகுதி எல்லையில் அத்துமீறி நுழைந்த சீன நாட்டு மீன்பிடிப் படகு தைவானிய கடலோரக் காவல் படையினரால் விரட்டியடிக்கப்பட்டது. அப்போது அந்த மீன்பிடிப்படகு கவிழ்ந்தது. அதில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக சீனாவுக்கும் தைவானுக்கும் மாதக்கணக்கில் நடந்துவந்த பேச்சுவார்த்தையில் ஒருவழியாக இரு தரப்பினரிடையேயும் உடன்பாடு காணப்பட்டதாக தைவான் தெரிவித்துள்ளது. இதனால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்குச் சேரவேண்டிய இழப்பீடு சென்று சேர்ந்துள்ளதாக தைவான் கூறியுள்ளது.
இந்த உடன்பாடு ஏற்பட்டதற்கு முனைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல உடன்பாடு கண்ட இரு தரப்பினருக்கும் நன்றி தெரிவிப்பதாக தைவானின் கடலோரப் பகுதி காவல்துறை நிர்வாகத்தின் துணை இயக்குநர் ஜெனரல் சியெ சிங்-சின், கின்மென் தீவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அத்துடன், தைவானின் கடும் எதிர்ப்பையும் மீறி, அதன் கட்டுப்பாட்டில் உள்ள கடற்பகுதிகளுக்கு அருகே சீனா கடந்த சில ஆண்டுகளாகவே ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் அப்பகுதிகளில் நாள்தோறும் விமானப்படையின் பயிற்சிகளையும் சீனா நடத்தி வருவதற்கு தைவான் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
தைவானின் கின்மென் தீவுப் பகுதியில் சீன நாட்டு மீனவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிறகு, கடந்த பிப்ரிவரி முதல் சீனக் கடலோரக் காவல்படையினரின் புழக்கம் அப்பகுதியில் அதிகமாகக் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
தைவான், கடந்த சில மாதங்களில் தனது எல்லை மற்றும் தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழையும் சீனக் கடலோரக் காவல் படையினரின் படகுகளை விரட்டியடித்து வருகிறது.
ஜூலை மாதம், சீனக் கடலோரப் பகுதிக்கு அருகில் சென்று கொண்டிருந்த ஒரு தைவானியப் படகை நிறுத்தி அதனைக் கையகப்படுத்தினர்.
பிப்ரவரி 14ஆம் தேதி சீன மீன்பிடிப் படகு அத்துமீறி தனது கடற்பகுதியில் நுழைந்ததை அடுத்து, தைவானின் கடலோரக் காவல்படையினர் அந்த மீன்பிடிப் படகை துரத்தியதில் படகு மூழ்கியது. அதில் பயணம் செய்த நான்கு மீனவர்களையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதையடுத்து சீனா, தன் மீனவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தது.
தொடர்புடைய செய்திகள்
இப்போது அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதால் இரு தரப்பிலும் இருந்து வந்த பதற்றம் சற்று தணிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

