தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறுமிகள் கத்தியால் குத்திக்கொலை; பிரிட்டனில் கொந்தளிப்பு, வன்முறை

2 mins read
2abe4dfa-4cbb-4910-b3c3-26b1143c2089
மாண்ட சிறுமிகளுக்கு மலர் அஞ்சலி செலுத்திய சவுத்போர்ட் மக்கள். - படம்: இபிஏ

சவுத்போர்ட்: ஜூலை 29ஆம் தேதியன்று பிரிட்டனின் சவுத்போர்ட் நகரில் நடைபெற்ற டெய்லர் சுவிஃப்ட் யோகா மற்றும் நடனப் பயிலரங்கில் கலந்துகொண்ட மூன்று சிறுமிகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர்.

ஆறு வயது பிபி கிங், ஏழு வயது எல்சி டாட் ஸ்டேன்கோம்ப், ஒன்பது வயது எலிஸ் டசில்வா அகுயார் ஆகிய சிறுமிகள் மாண்டனர்.

இந்தத் தாக்குதலில் மொத்தம் எட்டுச் சிறுவர்கள் காயமடைந்தனர்.

அவர்களில் ஐந்து சிறுவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகப் பிரிட்டிஷ் காவல்துறை கூறியது.

பயிலரங்கில் ஆறு வயதுக்கும் 11 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தாக்குதல் நடத்தியவரிடமிருந்து சிறுவர்களைக் காப்பாற்ற முயன்ற இரண்டு பெரியவர்களுக்கும் கடுமையான காயங்கள் ஏற்பட்டன.

தாக்குதலை 17 வயது இளையர் ஒருவர் நடத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அவரைக் கைது செய்துவிட்டதாக காவல்துறை கூறியது.

அவர் பிரிட்டனில் பிறந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் சந்தேகநபரைப் பற்றிய கூடுதல் விவரங்களைப் பிரிட்டிஷ் காவல்துறை வெளியிடவில்லை.

இதற்கிடையே, சிறுமிகளின் மரணம் பிரிட்டனில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலை 30ஆம் தேதியன்று இங்கிலாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள சிறு நகரமான சவுத்போர்ட்டில் முஸ்லிம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் திரண்டனர்.

அங்கு அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

வன்முறையில் இறங்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள், ‘இங்கிலிஷ் டிஃபென்ஸ் லீக்’ அமைப்பின் ஆதரவாளர்கள் என்று காவல்துறை கூறியது.

இதற்கு முன்பு அந்த அமைப்பு, இஸ்லாமிய சமயத்துக்கு எதிராக வன்முறைமிக்க ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள், காவல்துறை வாகனங்களைச் சேதப்படுத்தி அவற்றுக்குத் தீவைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாது, அருகில் உள்ள பள்ளிவாசலை நோக்கி அவர்கள் பல பொருள்களை வீசியெறிந்தனர்.

தங்கள் நாட்டைத் தங்களிடம் திருப்பிக் கொடுத்துவிடும்படி ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிட்டதை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி ஒன்றில் பார்க்கவும் கேட்கவும் முடிந்தது.

ஆர்ப்பாட்டக்காரர்களின் செயல் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்று பிரிட்டிஷ் காவல்துறை தெரிவித்தது.

அவர்கள் கட்டவிழ்த்த வன்முறையால் காவல்துறையினரும் அவசர சேவை ஊழியர்களும் கடும் சிரமத்துக்கு ஆளானதாகத் தெரிவிக்கப்பட்டது.

தாக்குதல் காரணமாக மீளாத் துயரில் மூழ்கியிருக்கும் சவுத்போர்ட் நகருக்குப் பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர் ஜூலை 30ஆம் தேதியன்று சென்று தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.

தாக்குதலால் அதிர்ச்சியடைந்திருப்பதாக பிரிட்டிஷ் மன்னர் சார்ல்சும் அவரது குடும்பத்தாரும் தெரிவித்துள்ளனர்.

சிறுமிகளுக்கு நடந்த கொடுமை தம்மை அதிர்ச்சியில் உறைய வைத்திருப்பதாகப் பிரபல அமெரிக்கப் பாடகி டெய்லர் சுவிஃப்ட் தமது இன்ஸ்டகிராமில் பதிவிட்டார்.

பாதிப்படைந்த சிறுமிகளின் குடும்பங்களுக்கு உதவும் வகையில் அவரது ரசிகர்கள் 125,000 பவுண்டுக்கும் (S$215,000) மேலான தொகை திரட்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்