ஹாங்காங்: சீனாவில் இந்த ஆண்டின் முதல் பாதியில் மணம் புரிந்துகொண்டோரின் எண்ணிக்கை குறைந்து 2013ஆம் ஆண்டின் அளவைத் தொட்டு உள்ளது.
மெதுவான பொருளியல் வளர்ச்சியும், உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவினமும் இளையர்கள் திருமணத்தைத் தள்ளிப்போடுவதற்கான காரணங்கள் என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
முதல் ஆறு மாதங்களில் சீனாவில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையோடு திருமண எண்ணிக்கை ஒத்து இருக்கிறது.
அங்கு தொடர்ந்து ஈராண்டுகளாக மக்கள்தொகை சுருங்கி வருகிறது. அதனை அதிகரிக்க பற்பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் அரசாங்கக் கொள்கை வகுப்பாளர்களுக்கு திருமணங்கள் சரிவை நோக்கிச் செல்வது சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஆண்டின் முதல் பாதியில் சீனாவில் 3.43 மில்லியன் திருமணங்கள் பதிவாயின. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை 498,000 சரிந்து உள்ளது. திருமணப் பதிவு தொடர்பான அரசாங்கத்தின் தரவுகள் இதனைத் தெரிவித்தன.
குழந்தை பெற்றுக்கொள்ள அரசாங்கம் ஊக்கத்தொகை வழங்குகிறது. அதனைப் பெற திருமணச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது, சலுகைகளைப் பெற திருமணம் ஒரு நிபந்தனையாக சீனாவில் உள்ளது.
ஏராளமான சீன இளையர்கள், சரியான வேலை இல்லாததாலும் நாட்டின் வளர்ச்சியைப் பற்றிய கவலைகளாலும் திருமணத்தைத் தள்ளிப்போடுகிறார்கள் அல்லது ஒற்றையராகவே இருக்க விரும்புகிறார்கள்.
2014 தொடங்கி கடந்த பத்தாண்டுகளாகவே சீனாவில் திருமண விகிதம் குறைந்து வருகிறது. பெருந்தொற்றுக் கட்டுப்பாடுகள் விலகியதன் காரணமாக 2023ஆம் ஆண்டு மட்டும் அந்த எண்ணிக்கையில் சற்று ஏற்றம் காணப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஆண்டின் இறுதிவரை இதே நிலை நீடித்தால், 1980ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆகக் குறைவான திருமணங்கள் நடைபெற்ற ஆண்டாக 2024 இருக்கும் என்று கணிக்கப்படுவதாக ஹி யாஃபு என்னும் மக்கள்தொகை நிபுணர் தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்குத் தயாராக இருக்கும் பெண்களைக் காட்டிலும் ஆண்களின் எண்ணிக்கை சீனாவில் அதிகமாக இருப்பதும் திருமணப் பதிவு வீழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்று என, அரசாங்க ஆதரவு பெற்ற குளோபல் டைம்ஸ் செய்தித்தாளிடம் அவர் கூறினார்.

