ஜகார்த்தா: புதிய இந்தோனீசியத் தலைநகராக அமைக்கப்பட்டுவரும் நுசந்தாராவில் அந்நாட்டு அதிபர் ஜோக்கோ விடோடோ முதன்முறையாக அமைச்சரவைச் சந்திப்பை நடத்தியுள்ளார்.
வரும் அக்டோபர் மாதம் அதிபர் பதவியிலிருந்து விலகவிருக்கும் திரு விடோடோ, 32 பில்லியன் டாலர் (42.38 பில்லியன் வெள்ளி) மதிப்பிலான நுசந்தாரா திட்டம் சரியான பாதையில் செல்கிறது என்று முதலீட்டாளர்களுக்கு உறுதியளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்படியிருக்கையில் அங்கு திங்கட்கிழமையன்று (ஆகஸ்ட் 12) அமைச்சரவைச் சந்திப்பு நடைபெற்றது.
தற்போதைய தலைநகரான ஜகார்த்தா, கூட்ட நெரிசல் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நகர் எதிர்நோக்கும் சுமையைக் குறைக்க நுசந்தாரா திட்டம் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
ஆனால், கட்டுமானப் பணிகளில் தாமதம், வெளிநாடுகளிலிருந்து போதுமான முதலீடுகள் கிடைக்காதது போன்ற பல சிக்கல்களால் நுசந்தாரா பணிகளில் இடையூறுகள் ஏற்பட்டன.
புதிய தலைநகரான நுசந்தாரா, இந்தோனீசியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க அடுத்த அத்தியாயத்தை சித்திரிப்பதாக திரு விடோடோ தனது அமைச்சர்களிடம் கூறினார்.
“வருங்காலத்தை வடிவமைப்பதற்குப் புதிய தலைநகரான நுசந்தாரா அடித்தளமாக அமைகிறது. முற்றிலும் புதிய தலைநகரை அமைக்கும் வாய்ப்போ ஆற்றலோ எல்லா நாடுகளிடமும் இருப்பதில்லை,” என்றார் திரு விடோடோ.
முன்னதாக, இந்தோனீசியாவின் அடுத்த அதிபராகப் பதவியேற்கவிருக்கும் பிரபோவோ சுபியாந்தோ, நுசந்தாராவுக்கான பணிகளைத் தொடரத் தாம் கடப்பாடு கொண்டுள்ளதாகக் கூறியிருந்தார். முடிந்தால் புதிய தலைநகருக்கான பணிகளை முடிக்கப்போவதாகவும் அவர் சொன்னார்.
புதிய அதிபரின் தலைமையில் நுசந்தாரா திட்டம் கைவிடப்படலாம் என்று நிலவிய ஐயத்தை அவர் தவிடுபொடியாக்கினார்.