பேங்காக்: தாய்லாந்தின் அரசமைப்புச் சட்ட நீதிமன்றம், அந்நாட்டின் பிரதமர் ஸ்ரெத்தா தவிசினைப் பணிநீக்கம் செய்யுமாறு புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 14) உத்தரவிட்டுள்ளது.
சிறைக்கு அனுப்பப்பட்ட முன்னாள் வழக்கறிஞர் ஒருவருக்கு அமைச்சர் பதவியை வழங்கியதன் காரணமாக அவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதனால் தாய்லாந்தின் அரசியல் நிலவரம் மீண்டும் மாறக்கூடும் என்ற சூழல் உருவாகியுள்ளது.
சொத்துச் சந்தை செல்வந்தரான திரு ஸ்ரெத்தா, கடந்த 16 ஆண்டுகளில் இதே நீதிமன்றத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நான்காவது பிரதமர் ஆவார். நடத்தை அடிப்படையில் சரியாக நடந்துகொள்ளாத ஒருவரை அமைச்சராக நியமித்து திரு ஸ்ரெத்தா அரசமைப்புச் சட்டத்தை மீறியதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நீதிபதிகளில் ஐவர் திரு ஸ்ரெத்தா பிரதமர் பொறுப்பிலிருந்து நீக்கப்படவேண்டும் என்று தீர்ப்பளித்தனர்; நால்வர் அவருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தனர்.
ஆட்சியைப் பிடித்து ஓராண்டு நிறைவடைவதற்கு முன்னரே திரு ஸ்ரெத்தா பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்நாட்டின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்க நாடாளுமன்றம் கூடவேண்டும்.
தாய்லாந்து, கடந்த சுமார் 20 ஆண்டுகளாக ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது, நீதிமன்றம் பல்வேறு அரசாங்கங்களைக் கவிழ்த்தது போன்ற சிக்கல்களை எதிர்நோக்கி வந்துள்ளது. இப்போது திரு ஸ்ரெத்தா நீக்கப்படடுள்ளது, அந்நாட்டின் அரசியல் சூழல் மேலும் நிலையற்றுப் போகக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தின் அரசமைப்புச் சட்ட நீதிமன்றம், அந்நாட்டு அரசியலில் எவ்வளவு தூரம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு திரு ஸ்ரெத்தாவுக்கு எதிரான தீர்ப்பு ஓர் எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது. இதே நீதிமன்றம், கடந்த வாரம் எதிர்க்கட்சியான மூவ் ஃபார்வர்ட் கட்சியைக் கலைக்க உத்தரவிட்டது.
தொடர்புடைய செய்திகள்
தாய்லாந்தின் அரச குலத்தை இழிவுபடுத்துவதற்கு எதிரான சட்டத்தை அக்கட்சி மாற்ற முயன்றதைத் தொடர்ந்து அதனைக் கலைக்க உத்தரவிடப்பட்டது.
பின்னர் மூவ் ஃபார்வர்ட் கட்சியின் எஞ்சிய அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து இம்மாதம் ஆறாம் தேதி பிராச்சாச்சொன் எனும் கட்சியைத் தொடங்கினர். ஆங்கிலத்தில் அக்கட்சி ‘மக்களின் கட்சி’ என்றழைக்கப்படுகிறது.
புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க தாய்லாந்தின் ஆளும் கூட்டணி வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 15) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திரு ஸ்ரெத்தாவின் ஃபியூ தாய் கட்சியில் பல காலமாக இருந்தவரும் அவரின் தலைமை ஆலோசகருமான திரு புரோம்மின் லெர்ட்சுரிதெஜ் இத்தகவலை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியிருந்தார்.
பின்னர் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 16) நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.