யங்கூன்: மியன்மாரில் ராணுவ உயர்மட்ட தளபதிகள், ராணுவத் தலைவரை தடுப்புக் காவலில் வைத்துள்ளதாகக் கூறப்படுவதை மியன்மார் ராணுவம் மறுத்துள்ளது. துரோகிகள் வதந்திகளைப் பரப்புவதாகவும் அது கூறியுள்ளது.
சீனாவிலிருந்து வெளியுறவு அமைச்சர் மியன்மாருக்கு வரவிருக்கும் வேளையில் இப்படியொரு புரளி கிளம்பியிருக்கிறது.
2021 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு சிறுபான்மை இன ஆயுதக் குழுக்களிடம் ராணுவம் சில பகுதிகளை இழந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ராணுவ ஆதரவாளர்களும் பொதுமக்களும் ராணுவத் தலைவர் மின் ஆங் ஹ்லைங்கை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இந்த நிலையில் ஆகஸ்ட் 13ஆம் தேதி சமூக ஊடகங்களில் வெளியான பல பதிவுகள் உயர்மட்ட தளபதிகளால் ராணுவத் தலைவர் தலைநகர் நேப்பிடாவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தன. ராணுவத் தலைமையை மாற்றும் நோக்கத்தோடு இது இடம்பெற்றுள்ளதாகவும் பதிவுகள் குறிப்பிட்டன.
“இவை எல்லாமே நாட்டின் நிலைமைத்தன்மையையும் அமைதியையும் சீர்குலைப்பதற்கான பிரசாரம்,” என்று அறிக்கை வாயிலாக ராணுவத் தலைமை தெரிவித்துள்ளது.
இந்தத் தகவல்களை பகிர்பவர்கள் நாட்டின் துரோகிகள் என்றும் அது சாடியது.
வெளிநாட்டிடமிருந்து குறுந்தொலைவு ஏவுகணைகள், வானூர்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பெறவிருப்பதாகவும் ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் பின்னர் கூறினார்.
சீன வெளியுறவு அமைச்சர் வாங்கி யி புதன்கிழமை (ஆகஸ்ட் 14) மியன்மாருக்கு வருகையளிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர், ராணுவத் தலைவர் மின் ஆங் ஹ்லைங்குடன் பேச்சு நடத்தவிருக்கிறார்.