பேங்காக்: புதிய, கூடுதல் அபாயகரமான குரங்கம்மை கிருமித்தொற்றுக்கு ஆளானதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 21) கண்டறிந்துள்ளதாக தாய்லாந்து அறிவித்துள்ளது.
அவ்வகை குரங்கம்மைக் கிருமித்தொற்று உலகளவிலான பொதுச் சுகாதார அவசரநிலை என்று அண்மையில் உலகச் சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியது.
தாய்லாந்து அடையாளம் கண்டுள்ள குரங்கம்மை கிருமித்தொற்றுக்கு ஆளான நபர், ஆப்பிரிக்க நாடு ஒன்றிலிருந்து நாடு திரும்பிய ஐரோப்பியர். அந்நாட்டின் நோய்த் தடுப்புப் பிரிவின் தலைவரான தொங்சாய் கீரடிஹட்டயக்கோர்ன் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் இத்தகவலை வெளியிட்டார்.
அந்நபர் எவ்வகை குரங்கம்மைக் கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளார் என்பதைத் தெரிந்துகொள்ள பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், அவர் கூடுதல் அபாயகரமான கிளேட் 1 வகை குரங்கம்மைத் தொற்றுக்கு ஆளாகியிருப்பார் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
சம்பந்தப்பட்ட நபர் தற்போது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
“ஒரு பரிசோதனை செய்துள்ளோம். அவருக்கு நிச்சயமாக குரங்கம்மை கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஏற்பட்டுள்ளது நிச்சயமாக கிளேட் 2 வகை குரங்கம்மைத் தொற்று அல்ல,” என்று தொங்சாய் ஏஎஃப்பியிடம் குறிப்பிட்டார்.
“அவர் கிளேட் 1 வகை கிருமித்தொற்றுக்குத்தான் ஆளாகியிருக்கிறார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எனினும், இரண்டு நாள்கள் கழித்து ஆய்வுக் கூடத்திலிருந்து பரிசோதனை முடிவுகள் வரும்போதுதான் உறுதியாகத் தெரியும்,” என்றும் அவர் கூறினார்.