இந்தோனீசியப் பெண்ணை அடிமையாக நடத்திய மலேசியருக்கு ஆஸ்திரேலியாவில் சிறை

இந்தோனீசியப் பெண்ணை அடிமையாக நடத்திய மலேசியருக்கு ஆஸ்திரேலியாவில் சிறை

2 mins read
4ee3909c-6275-420e-a172-61086a67f98a
ஆஸ்திரேலியாவில் இந்தோனீசியப் பெண்ணை அடிமையாக நடத்திச் சித்திரவதை செய்த வழக்கில் மலேசிய ஆடவர் சோங் சீ கிட்டிற்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. - படம்: ஏபிசி நியூஸ்
Google News Preferred Icon

மெல்பர்ன்: இந்தோனீசியாவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரைத் தனது வீட்டில் அடிமையாக அடைத்து வைத்து, கொடூரமான தாக்குதல்களை நடத்திய 47 வயது மலேசிய ஆடவர் சோங் சீ கிட்டிற்கு  ஆஸ்திரேலிய நீதிமன்றம் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

மெல்பர்ன் நகர நீதிமன்ற நீதிபதி மைக்கல் கேஹில் இத்தீர்ப்பை வழங்கினார். விசாரணையின்போது சோங்கை குற்றவாளி எனத் தீர்மானித்த நீதிபதிகள், பாதிக்கப்பட்டப் பெண்ணை அவர் தனது சொந்த உடைமை போலக் கருதிச் சித்திரவதை செய்ததைச் சுட்டிக்காட்டினர்.

சிறிதளவு தவறு செய்தாலும் முகத்தில் மிதிப்பது, சுவரில் தலையை மோதவிடுவது போன்ற கொடூரமான செயல்களில் சோங் ஈடுபட்டு வந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 

மேலும், அப்பெண்ணிற்குப் போதுமான உணவு, மருத்துவம், உறக்கம் ஆகியவற்றை மறுத்து, அவரது சுதந்திரத்தையும் சோங் முடக்கியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் சோங்கிற்கும் இடையே 2015ஆம் ஆண்டு மலேசியாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் பழக்கம் ஏற்பட்டு, “தாய்-மகன்” போன்ற உறவு உருவாகியுள்ளது.

2017ல் ஆஸ்திரேலியாவிற்கு வந்த அவரை, சோங் தம்பதியினர் திடீரென தவிக்கவிட்டு மலேசியா சென்றதால், அவர் நாடோடியாக வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.  பின்னர் 2021ல் மீண்டும் மெல்பர்ன் திரும்பிய சோங், தனது இரண்டாவது குழந்தை பிறப்பிற்குப் பிறகு 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அப்பெண்ணை வீட்டின் பராமரிப்புப் பணிகளுக்காகத் தங்களோடு தங்க வைத்துள்ளார்.

அந்தக் காலகட்டத்தில், வீட்டு வாடகை, மருத்துவச் செலவுகளுக்காகத் தனது உறவினர்களிடம் கடன் வாங்குமாறும் அப்பெண்ணை சோங் கட்டாயப்படுத்தியுள்ளார். 

இறுதியில், 2022 அக்டோபர் மாதம் அந்த வீட்டிலிருந்து தப்பிச் சென்ற அப்பெண்ணைக் காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தபோதே இந்த அடிமைத்தனக் கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்தன.

ஆஸ்திரேலிய கூட்டாட்சிச் சட்டத்தின்படி அடிமையாக நடத்துவது 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக்குரிய கடுமையான குற்றமாகும்.

இந்த வழக்கில் சோங்கின் மனைவி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவர் விடுவிக்கப்பட்டார்.

சிறைத்தண்டனை காலத்திற்குப் பிறகு சோங் மலேசியாவிற்குத் நாடுகடத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அந்த இந்தோனீசியப் மூதாட்டி, 2024ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

குறிப்புச் சொற்கள்