பாரிஸ் போராட்டத்தில் வன்முறை; தீயில் எரிந்த காவல்துறை அதிகாரி

பாரிஸ் போராட்டத்தில் வன்முறை; தீயில் எரிந்த காவல்துறை அதிகாரி

500க்கும் மேற்பட்டோர் கைது, ஊரடங்கு
1 of 3
படம்: இபிஏ
படம்: இபிஏ
படம்: இபிஏ

01 Nov 2026 - 8:03 pm

2 mins read

பாரிஸ்: பிரான்சில் விண்ணைத் தொடும் வாழ்க்கைச் செலவின உயர்வுக்கு எதிராக நூறாயிரக்கணக்கான மக்கள் திரண்ட மூன்றாவது வார இறுதிப் போராட்டம், பாரிசிலும் மற்ற முக்கிய நகரங்களிலும் வன்முறையாக உருவெடுத்தது.

ஹாலோவீன் பண்டிகையை முன்னிட்டு விசித்திர உடைகளில் பல்லாயிரக்கணக்கானோர் அமைதியாகப் பேரணி சென்றாலும் ஊர்வலத்தின் முடிவில் முகமூடி அணிந்த கலவரக்காரர்கள் காவல்துறையினர் மீது கற்களையும் பெட்ரோல் குண்டுகளையும் வீசித் தாக்குதல் நடத்தினர்.

பாரிசில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் மீது தீப்பற்றி எரிந்த சம்பவம் உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களை உள்துறை அமைச்சர் லோரான் நூனேஸ் வன்மையாகக் கண்டித்தார். அந்தத் தாக்குதலை “கொலை முயற்சி” எனக் குறிப்பிட்ட லோரான் நூனேஸ், தீவிர இடதுசாரி குழுக்களே அதற்குக் காரணம் எனக் கண்டனம் தெரிவித்தார்.

பாரிசில் நான்கு காவல்துறை அதிகாரிகளும் ஒரு துணை ராணுவப் படை வீரரும் காயமடைந்தனர். மூவர் பெட்ரோல் குண்டு வீச்சால் தீக்காயங்களுக்கு ஆளாயினர்.

காவல்துறையினர் 565 பேரைக் கைது செய்துள்ளதாக உள்துறை அமைச்சு சனிக்கிழமை (அக்டோபர் 31) இரவு தெரிவித்தது.

பாரிசின் முக்கியப் பகுதிகளில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நாடு முழுவதும் ஏறக்குறைய 320,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இளையர் அமைப்புகள் இக்கூட்டம் அரை மில்லியனைத் தாண்டும் எனக் கூறின.

செலவினங்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சி செய்துவரும் சூழலில், மாணவர்கள், தொழிற்சங்கத்தினர், ‘மஞ்சள் அங்கி’ போராட்டக்காரர்கள் ஒன்றிணைந்து வாழ்க்கைச் செலவின உயர்வு, கல்விச் சீரழிவு, குடிமை உரிமை மறுப்புக்கு எதிராகக் குரலெழுப்பி வருகின்றனர்.

ஆறு மாதங்களுக்குள் பிரான்சில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தீவிர வலதுசாரித் தலைவரான மரின் லெ பென் கலவரக்காரர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொழிற்சங்கங்கள் நவம்பர் 5ஆம் தேதி மேலும் ஒரு பொதுப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் அங்கு அரசியல் பதற்றம் தீவிரமடைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்