ஹோர்முஸ் நீரிணை: கப்பல் பாதுகாப்பு திட்டத்தை நிறுத்திவைத்த அமெரிக்கா

ஹோர்முஸ் நீரிணை: கப்பல் பாதுகாப்பு திட்டத்தை நிறுத்திவைத்த அமெரிக்கா

2 mins read
அமைதி ஒப்பந்தம் எட்டப்படுவதைப் பொறுத்தே இந்தத் தற்காலிக ஏற்பாடு
201daaa5-d4a5-474f-a7d0-8546ec04fc12
திங்கட்கிழமை (மே 4) சிறிய வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். - படம்: இபிஏ

வாஷிங்டன்: ஈரானுடன் அமைதி உடன்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளும் சாத்தியத்தை பரிசீலிக்க ‘புரோஜெக்ட் ஃபிரீடம்’ என்ற பெயரில் ஹோர்முஸ் நீரிணையின் விடுதலைக்கான திட்டத்தை நிறுத்திவைப்பதாக அதிபர் டிரம்ப் செவ்வாய்க்கிழமை (மே 5) தெரிவித்தார்.

திட்டம் தொடங்கி ஒரே நாளில் சமரசப் பேச்சுகளை நடத்திவரும் பாகிஸ்தான் உட்பட மற்ற நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த முடிவை எடுத்ததாக அதிபர் டிரம்ப் கூறினார்.

இருநாடுகளுக்கும் இடையிலான ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்துள்ள இந்த வேளையில், ஈரான் உடன் அமைதி உடன்பாட்டை எட்டுவதில் ‘பெரும் முன்னேற்றம்’ ஏற்பட்டுள்ளதாக திரு டிரம்ப் குறிப்பிட்டார்.

“எனவே, ஒப்பந்தம் செய்யப்படுமா இல்லையா என்பதைப் பொறுத்து வர்த்தகக் கப்பல்களைப் பாதுகாப்பாக நீரிணையில் கூட்டிச் செல்லும் திட்டம் சிறுது காலம் நிறுத்திவைக்கப்படுகிறது,” என்று அவர் விளக்கினார்.

ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன என வெளியுறவு அமைச்சர் மார்க் ரூபியோ அறிவித்த சில மணி நேரங்கள் கழித்து அதிபரின் கருத்து வெளிவந்தது.

நீரிணையில் கப்பல்கள்மீது ஈரான் எவ்விதப் புதிய தாக்குதலை நடத்தினாலும், மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் உரிமையை அமெரிக்கா தக்கவைத்துள்ளது எனவும் வெளியுறவு அமைச்சர் எச்சரித்தார்.

அதற்கு முன்னதாக, அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் ஆணையிடப்பட்டால் மீண்டும் அங்கு தாக்குதலை நடத்தத் தயாராக உள்ளதாகக் குறிப்பிட்டதும் கவனத்துக்குரியது.

மத்திய கிழக்கில் ஈரானின் துறைமுகங்கள் மீதான முழுமையான தடை தொடரும் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

இதற்கிடையில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்ச்சி சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயைச் சந்திக்க புதன்கிழமை (மே 6) பெய்ஜிங் சென்றடைந்தார்.

குறிப்புச் சொற்கள்