கார் கழுவும் சேவை உரிமம்: ஜோகூர் பாருவில் கடுமையான விதிமுறைகள்

2 mins read
d13bbf83-f7d4-4c7b-946a-214427d4e1f2
வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் சேவை வழங்கும் கார் கழுவும் நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்படக்கூடும். - படம்: த ஸ்டார்/ ஏஷியா நியூஸ் நெட்வொர்க்

ஜோகூர் பாரு: கார் கழுவும் சேவை வழங்கும் நிலையங்களுக்கு ஜோகூர் பாரு நகர மன்றம் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

இத்தகைய நிலையங்களின் உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மீண்டும் மீண்டும் எழுவதால் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுவதாக நகர மேயர் முகம்மது ஹஃபிஸ் அகமது கூறினார்.

அவர்களுக்கான உரிமங்கள் தொடர்பில் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

“கடுமையான விதிமுறைகள் உடனடியாக நடப்புக்கு வந்துள்ளன. அதையடுத்து புதிய நிலையங்களுக்கான உரிமத்துக்கு விண்ணப்பிக்கும் நடைமுறையும் மீண்டும் தொடங்கியுள்ளது. ஜோகூர் பாரு நகர மன்றத்தின்கீழ் செயல்படும், உரிமம் பெற்ற 543 கார் கழுவும் நிலையங்களுக்கும் விதிமுறை மாற்றங்கள் பொருந்தும்,” என்று திரு ஹஃபிஸ் கூறினார்.

புதிய நிலையங்களுக்கான உரிமங்களுக்கு விண்ணப்பம் செய்வோர் இந்த விதிமுறைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியது கட்டாயம் என்றார் அவர்.

“புதிதாக விண்ணப்பிப்போர் தங்கள் வளாகங்களில் முறையான கழிவுநீர் வடிகால் கட்டமைப்பு இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அத்துடன், தங்கள் நடவடிக்கைகள் பொதுச் சாலைகளைச் சேதப்படுத்தாமலிருப்பதையும் அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்,” என்று மேயர் முகமது ஹஃபிஸ் குறிப்பிட்டார்.

முக்கியமாக, வேதிக்கழிவுகள் ஆற்றில் கலக்காமலிருப்பதை உறுதிசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், சோதனை நடவடிக்கைகளின்போது தங்கள் நிலையத்தில் வேலைசெய்யும் ஊழியர்கள் குறிப்பாக வெளிநாட்டு ஊழியர்களின் முழுவிவரங்களையும் சமர்ப்பிக்க நிலைய உரிமையாளர்கள் தயாராக இருக்கவேண்டும் என்றார் அவர்.

வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் சேவை வழங்கும் கார் கழுவும் நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்படக்கூடும் என்று மேயர் எச்சரித்தார்.

ஜோகூர் பாருவில் உள்ள கார் கழுவும் நிலையம் ஒன்று உள்ளூர் வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்க மறுத்ததாகக் கூறப்படுவது தொடர்பான சமூக ஊடகப் பதிவு அண்மையில் இணையத்தில் பரவியது. ஆனால் அந்த விவகாரம் தொடர்பில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

இருப்பினும், நகர மன்றம் அத்தகைய நடத்தையைச் சகித்துக்கொள்ளாது என்றும் அவ்வாறு செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த நிலையத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் திரு ஹஃபிஸ் கூறினார்.

குறிப்புச் சொற்கள்