சாபாவில் வலுவான நிலநடுக்கம்; சிங்கப்பூரில் அதிர்வுகள்

சாபாவில் வலுவான நிலநடுக்கம்; சிங்கப்பூரில் அதிர்வுகள்

1 of 2
படம்: அமெரிக்கப் புவியியல் ஆய்வகம்
படம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

23 Feb 2026 - 10:09 am

2 mins read

கோலாலம்பூர்: மலேசியாவின் சாபா மாநிலத்தை பிப்ரவரி 23ஆம் தேதி வலுவான 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியது.

நிலநடுக்கத்தின் மையப்பகுதி, சாபா மாநிலத்தின் தலைநகர் கோத்தா கினபாலுவின் வடகிழக்குக்கு 100 கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில், 619.8 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வகம் தெரிவித்தது.

நிலநடுக்கம் பின்னிரவு 12.57 மணிக்கு ஏற்பட்டது.

நிலநடுக்கத்தால் மக்கள் பாதிப்படையும் அல்லது சேதங்கள் ஏற்படும் சாத்தியம் குறைவு என்று ஆய்வகம் கூறியது.

அமெரிக்க சுனாமி எச்சரிக்கை நிலையம் எந்தவோர் எச்சரிக்கையையும் விடுக்கவில்லை.

இதற்கிடையே, நிலைமையைத் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணித்துவருவதாக மலேசிய வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.

மலேசிய வானிலை ஆய்வகம், நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவை 6.8 என்று பதிவுசெய்தது. சாபாவின் மேற்குக் கடலோரப் பகுதியிலும், சரவாக் மாநிலத்தின் சில இடங்களிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாக அது தெரிவித்தது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, எந்தவொரு சம்பவமும் பதிவாகவில்லை என்று சாபா தீயணைப்பு, மீட்புத் துறை கூறியதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இந்நிலையில், பலரும் தங்கள் அனுபவங்களைச் சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொண்டனர். சிங்கப்பூரில், தோ பாயோ, பெலஸ்டியர், பொங்கோல் போன்ற சில இடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டதாகக் குடியிருப்பாளர்கள் கூறினர்.

ஈஸ்ட் கோஸ்ட்டில் குடியிருக்கும் ஒருவர், சிங்கப்பூரில் அவர் உணர்ந்த மிக வலுவான அதிர்வு அது என்று ‘ரெடிட்’ இணையத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

நிலநடுக்கம் சிங்கப்பூரிலிருந்து 1,500 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டதாக சிங்கப்பூரின் வானிலைச் சேவை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்