இத்தாலியில் மாணவர்களும் ஊழியர்களும் அமைதிப் போராட்டம்

இத்தாலியில் மாணவர்களும் ஊழியர்களும் அமைதிப் போராட்டம்

படம்: இபிஏ

31 Oct 2026 - 10:21 am

2 mins read

ரோம்: பள்ளிக் கல்விக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு, கடுமையான வாழ்க்கைச் செலவு உயர்விலிருந்து நிவாரணம் கோரி, இத்தாலி முழுதும் ஆயிரக்கணக்கான மாணவர்களும் தொழிலாளர்களும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 30) சாலைகளில் போராடினர்; பெரும்பாலும் அமைதியான முறையில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

பிரான்சிலும் ஸ்பெயினிலும் நடைபெற்ற போராட்டங்களால் உந்தப்பட்டு, அண்மைக்காலமாக எழுந்துள்ள ஆர்ப்பாட்டங்களில் இதுவே மிகப்பெரியது.

மாணவர்கள் கூடாரங்கள் அமைத்தும் பள்ளிகளை ஆக்கிரமித்தும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இத்தாலியின் யுஎஸ்பி தொழிற்சங்கம் விடுத்த பொதுவேலைநிறுத்த அழைப்பு, அக்டோபர் 30ஆம் தேதிப் போராட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான ஊழியர்களை ஈர்த்தது.

அண்மை வாரங்களில் எரிபொருள் விலை உயர்வு, அதிகரித்துவரும் பாதுகாப்புச் செலவினங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்துவரும் லாரி ஓட்டுநர்கள், டாக்சி ஓட்டுநர்கள், விவசாயிகளும் இதில் அடங்குவர்.

ரோமின் முக்கிய ரயில் நிலையத்தில் தொடங்கி கொலோசியம், பொருளியல் அமைச்சுக் கட்டடத்தைக் கடந்துசென்றது ஊர்வலம். அதில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொடிகளை அசைத்தும் ஒலிபெருக்கிகளில் முழக்கமிட்டும் சென்றனர்.

அக்டோபர் 30ஆம் தேதி இத்தாலி முழுதும் ஒரு மில்லியனிலிருந்து ஒன்றரை மில்லியன் பேர்வரை பங்கேற்றிருக்கக்கூடும் என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தொழிற்சங்கம் கூறியது. அதிகாரிகள் அதிகாரபூர்வ எண்ணிக்கையை வெளியிடவில்லை.

நாடு முழுதும், பல்வேறு போராட்டக் களங்களின் ஓரங்களில் கலகத் தடுப்புக் காவலர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். பதிவான சில மோதல்களில் ஒன்றாக, டுரின் நகரில், வட்டார நிர்வாக அலுவலகத்தை நோக்கிச் செல்ல முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களைக் காவல்துறையினர் தடியடி நடத்தியும் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் பின்வாங்கச் செய்தனர்.

ரோமில், போராட்டத்தின் முடிவை நோக்கிச் சென்றபோது, இளையர் சிலர் போத்தல்களை வீசுவதையும் குப்பைத் தொட்டிகளைத் தள்ளிவிடுவதையும் அவற்றில் ஒன்றுக்குத் தீ வைப்பதையும் பார்த்ததாக ஏஎஃப்பி செய்தியாளர்கள் கூறினர்.

அக்டோபர் 17, 18ஆம் தேதி மிலனில் இளையர்க்கும் காவல்துறையினர்க்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. அவற்றைத் தொடர்ந்து, இத்தாலியப் பிரதமர் ஜோர்ஜா மெலோனியின் வலசாரி அரசாங்கம் பொதுக்கூட்டங்கள் மீதான சட்டங்களைக் கடுமையாக்கியதுடன், சிறாரைக் காவலில் வைப்பதற்கான விதிகளையும் தளர்த்தியது.

குறிப்புச் சொற்கள்