வாட்ஸ்அப் செயலியின் ஒவ்வொரு கணக்குடனும் இணைக்கப்பட்டுள்ள அடையாளங்கள், தொலைபேசி எண்களைச் சரிபார்க்கக் கோருவதற்கான சாத்தியக்கூறுகளை மலேசியாவின் தகவல் தொடர்பு அமைச்சு ஆராய்ந்து வருகிறது.
இணைய மோசடிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இம்முயற்சிகள் குறித்து ஆராயப்படுகிறது.
மோசடியாளர்களால் இந்தச் செயலி தவறாகப் பயன்படுத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இந்தப் பரிந்துரை ஆராயப்பட்டு வருவதாக அந்நாட்டு அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
மூத்த குடிமக்கள் பாதுகாப்பு அமைப்பு முன்னோடித் திட்டம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தற்போது, வாட்ஸ்அப் எந்தவொரு கணக்குச் சரிபார்ப்பு நிபந்தனையையும் விதிக்கவில்லை என்றும் நவம்பர் 15 தேதியன்று அவர் கூறினார்.
மோசடி வழக்குகளில் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணைய ஊழியர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் 61 பேரை அந்நாட்டின் காவல்துறையினர் கைது செய்தது குறித்துக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஃபாஹ்மி, சட்டத்தை மீறியது கண்டறியப்பட்டால் இதில் தொடர்புடைய அனைவர் மீதும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்று கூறினார்.
போலி அழைப்புகளைத் தடுக்க ஆணையம் பல தொழில்நுட்ப மாற்றங்களைச் செயல்படுத்தியிருந்தாலும், மோசடிக் கும்பல்கள் தற்போது வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்துவது, இணையச் சூதாட்டத்திற்காகக் கடன் வழங்குவது உள்ளிட்ட புதிய உத்திகளைக் கையிலெடுத்துள்ளதாக அமைச்சர் ஃபாஹ்மி தெரிவித்தார்.
சந்தேகத்திற்குரிய அழைப்புகள் வந்தால் அவற்றை உடனடியாகத் துண்டித்துவிட்டு, காவல்துறை அல்லது மலேசியத் தகவல்தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திடம் புகாரளிக்குமாறு பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
