நியூயார்க்: 12 வயதை எட்டாத குழந்தைகள் திறன்பேசியைப் பயன்படுத்துவது அவர்களின் உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிப்பதைக் கண்டறிந்ததாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைக்கு எந்த வயதில் திறன்பேசியைக் கொடுக்கலாம் என்பதில் குழப்பமடைகின்றனர். திறன்பேசி வாங்கித் தருமாறு கேட்கும் பிள்ளைகள் ஒரு பக்கம், இளம்பருவ திறன்பேசிப் பயன்பாட்டால் தீங்கு நேரும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுவது மற்றொரு பக்கம். இவையே அந்தக் குழப்பத்திற்கான காரணங்கள்.
குழப்பத்தைத் தீர்க்கும் நோக்கில் புதிதாக ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் முடிவுகள் திங்கட்கிழமை (டிசம்பர் 1) ‘பீடியாட்ரிக்ஸ்’ (Pediatrics) சஞ்சிகையில் வெளியிடப்பட்டன.
12 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் திறன்பேசியைப் பயன்படுத்தும்போது மன அழுத்தம், உடல் பருமன், போதுமான தூக்கமின்மை போன்ற அபாயங்களுக்கு ஆளாவது ஆய்வில் கண்டறியப்பட்டது.
திறன்பேசியை வைத்திராத, 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் உடல்நலத்தோடு ஒப்பிட்டு ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டது.
இளம்பருவத்தினரின் மூளை அறிவுத்திறன் வளர்ச்சி என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வில் 10,500க்கும் மேற்பட்ட அமெரிக்கக் குழந்தைகள் கலந்துகொண்டு கருத்துகளைப் பரிமாறின.
குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் நீண்டகாலப் பாதிப்பைக் கண்டறிய இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளில் இதுவே ஆகப் பெரியது.
12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தங்களது முதல் திறன்பேசியைப் பெற்ற பின்னர் தங்கள் தூக்கம் பாதிக்கப்படுவதையும் உடல் பருமனாவதையும் உணர்ந்ததாகத் தெரிவித்தன.
தொடர்புடைய செய்திகள்
திறன்பேசியை 12 வயதுக்குள் பெற்றிராத குழந்தைகளின் நிலை பற்றியும் ஆய்வு கவனம் செலுத்தியது.
திறன்பேசி வைத்திராத குழந்தைகளைக் காட்டிலும் அதனை வைத்திருக்கும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மனநலப் பிரச்சினையின் அறிகுறிகளை உணர்ந்ததாக ஆய்வு கண்டறிந்தது.
இளமைப் பருவத்தில் திறன்பேசி வைத்திருப்பதற்கும் உடல்நலத்திற்கும் இடையிலான தொடர்பை மட்டுமே ஆராய்ந்ததாகவும் அதற்கான காரணத்தையும் விளைவுகளையும் ஆராயவில்லை என்றும் ஆய்வறிக்கை குறிப்பிட்டது.
திறன்பேசி வைத்திருக்கும் இளம்பருவத்தினர் தூங்கவும் உடற்பயிற்சி செய்யவும் நேருக்கு நேர் பேசவும் குறைவான நேரத்தைச் செலவிட்டது இதற்கு முன்னர் நடத்தப்பட்ட ஆய்வுகளிலும் தெரியவந்ததாக ஆய்வை முன்னின்று நடத்திய டாக்டர் ரேன் பார்சிலே குறிப்பிட்டார்.

