வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பால் சிங்கப்பூருக்கான அமெரிக்கத் தூதராகப் பரிந்துரைக்கப்பட்ட டாக்டர் அஞ்சனி சின்ஹா, கடினமான செனட் விசாரணையின்போது அமெரிக்காவின் வரிவிதிப்புக் கொள்கைகளைத் தற்காத்துப் பேச சிரமப்பட்டார்.
டாக்டர் சின்ஹாவுடன், இந்தப் பதவிக்கு முன்மொழியப்பட்ட மற்ற நால்வர் இடம்பெற்ற இரண்டு மணி நேர விசாரணை புதன்கிழமை (ஜூலை 9) நடந்தது. டாக்டர் சின்ஹாவின் தொடக்க உரை மூலம் நிதானமாகத் தொடங்கிய விசாரணை, ஜனநாயக செனட்டர் டாமி டக்வொர்த் உடனான கேள்வி-பதில் அங்கத்திற்கு வந்தபோது காரசாரமாக மாறியது.
திருவாட்டி டக்வொர்த், கேள்விகளைத் தொடுக்கும் முன்னரே, “இது, நீங்கள் சாதாரணமாக அல்லது கவர்ச்சியாக இருக்கும் என்று நினைப்பதாலோ, அல்லது சிங்கப்பூர் வாழ ஒரு சிறந்த இடம் என்பதாலோ நீங்கள் ஒரு வேடிக்கையாக எடுத்துக்கொள்ளும் பதவியன்று,” என்று கூறினார்.
“வெளிப்படையாக, இந்தப் பதவிக்கு நீங்கள் குறிப்பாகத் தகுதிபெற்றவர் என்று நான் நினைக்கவில்லை. மேலும், உங்கள் புரிதல் இல்லாமை எங்கள் முக்கிய உறவில் தெரியாத்தனமாக உரசலை ஏற்படுத்தக்கூடும் என்று நான் கவலைப்படுகிறேன்.
“சிங்கப்பூரில் நமது தூதரகத்தை உங்களால் திறம்பட வழிநடத்த முடியுமா? எனக்கு சந்தேகங்கள் உள்ளன,” என்று செனட்டர் கூறினார்.
திரு பீட் ஹெக்செத்தை அமெரிக்கத் தற்காப்பு அமைச்சராக உறுதிப்படுத்த ஜனவரியில் நடந்த விசாரணையின்போதும் கடுமையான கேள்விகளை திருவாட்டி டக்வொர்த் எழுப்பியிருந்தார்.
2024ல் சிங்கப்பூருடனான அமெரிக்காவின் வர்த்தக உபரி எவ்வளவு பெரியது என்று பதிலளிக்கும்படி டாக்டர் சின்ஹாவிடம் அவர் கேட்டுக்கொண்டார். டாக்டர் சின்ஹா தடுமாற்றத்துடன் US$18 பில்லியன் (S$23 பி.) என்று பதிலளித்தபோது, அது US$2.8 பில்லியன் என்று திருவாட்டி டக்வொர்த் சுட்டிக்காட்டினார். டாக்டர் சின்ஹாவின் பதில் பெரிதும் வித்தியாசமாக இருந்ததாக திருவாட்டி டக்வொர்த் குறிப்பிட்டார்.
“நீங்கள் உறுதிப்படுத்தப்பட்டால், சிங்கப்பூரில் நமது நட்பை அதிபரிடம் எப்படி விளக்குவீர்கள்?” என்று திருவாட்டி டக்வொர்த் கேட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“அமெரிக்கா சிங்கப்பூருடன் கிட்டத்தட்ட US$3 பில்லியன் வர்த்தக உபரியைக் கொண்டிருக்கும்போது, சிங்கப்பூர் ஏற்றுமதிகள்மீது 25% வரை வரி விதிப்பேன் என்ற அதிபர் டிரம்ப்பின் அச்சுறுத்தலை சிங்கப்பூரில் உள்ள நம் நண்பர்களிடம் எப்படி விளக்குவீர்கள்?” என்றும் அவர் வினவினார்.
அதற்குப் பதிலளித்த டாக்டர் சின்ஹா, “இரு நாடுகளுக்கும் இரு தலைவர்களுக்கும் இடையிலான எந்த உரையாடலிலிருந்தும் நாங்கள் விலகிச் செல்லவில்லை,” என்றார்.
“உறுதிப்படுத்தப்பட்டால், நான் சிங்கப்பூர் அரசாங்கத்துடன் ஒரு தனிப்பட்ட உறவை ஏற்படுத்துவேன். உரையாடல் தொடர்வதையும் வர்த்தகப் பிரச்சினைகளை நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து தீர்ப்பதையும் உறுதிசெய்வேன்,” என்று அவர் மேலும் கூறினார்.
ஆனால், அவரது பதில் திருவாட்டி டக்வொர்த்துக்கு திருப்தியளிக்கவில்லை.
சிங்கப்பூர் எப்போது ஆசியான் தலைமைப் பதவியை ஏற்கும் என்று திருவாட்டி டக்வொர்த் அவரிடம் வினவினார். அதற்கு டாக்டர் சின்ஹாவால் ஆண்டைக் குறிப்பிட முடியாதபோது, ‘2027’ என்று திருவாட்டி டக்வொர்த் பதிலளித்தார்.
“நீங்கள் இதைக் கடுமையாக எடுத்துக்கொள்ளவில்லை என்று நான் நினைக்கிறேன். நீங்கள் சிங்கப்பூரில் ஒரு நல்ல வாழ்க்கையை வாழப் போகிறீர்கள் என்று நினைக்கிறீர்கள். ஆனால், உண்மையில் அங்கு வேலை செய்யப் போகிறவரே எங்களுக்குத் தேவை,” என்றார் திருவாட்டி டக்வொர்த்.

