சுபாங் ஜெயா கொலை வழக்கு: 30 பேரிடம் வாக்குமூலம்

1 mins read
5594489c-e6cc-4dbd-b169-847d5bc251b3
காவல்துறை துணை ஆணையர் அஸ்லான் ர்ன் மமாட். - படம்: பெர்னாமா

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் கல்லூரி மாணவி மாண்டது தொடர்பிலான விசாரணையில் காவல்துறையினர் 30 தனிநபர்களிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

அந்த மாணவி, சென்ற வாரம் சுபாங் ஜெயாவில் உள்ள தனது குடும்ப வீட்டில் கொல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அதன் தொடர்பில் குடும்பத்தார், நண்பர்கள், சம்பவத்தை நேரில் கண்டவர்கள் உள்ளிட்டோரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பெர்னாமா ஊடகம் தெரிவித்துள்ளது.

விசாரணையை முடிக்க மேலும் சிலரின் வாக்குமூலம் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக துணை காவல்துறை துணை ஆணையர் அஸ்லான் பின் மமாட் கூறினார்.

“சம்பவத்தை நேரில் கண்டிருக்கக்கூடிய பலரை அடையாளம் காண முயற்சி செய்து வருகிறோம்,” என்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) காவல்துறை தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

மாண்ட கல்லூரி மாணவி 20 வயதைத் தாண்டியவர். இம்மாதம் 14ஆம் தேதி வீட்டின் இரண்டாவது தளத்தில் இருக்கும் நடுக்கூடத்தின் கூரை மின்விசிறியில் தூக்கிலிடப்பட்டுத் தொங்கிக்கொண்டிருந்ததை அவரின் தந்தை கண்டார்.

மாணவியின் மரணத்துக்கு ஹையாய்ட் (hyoid) எலும்பைச் சுற்றி ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணம் என்பது செர்டாங் மருத்துவமனை நடத்திய பிரேதப் பரிசோதனையில் உறுதியானது. அவரின் தசைகள், எலும்புகள் ஆகியவற்றில் காணப்பட்ட காயங்கள் கழுத்தை நெரித்ததால் ஏற்பட்டவை என்பதும் தெரியவந்தது.

தனது சகோதரி உள்ளிட்ட உறவினர்களுடன் வசித்து வந்த மாணவி, மாண்டபோது வீட்டில் தனியாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. கொலைக் குற்றம் என்ற சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்