கோலாலம்பூர்: உரிமம் பெற்ற சமூக ஊடக சேவை வழங்குநர்கள், ‘இணையப் பாதுகாப்புச் சட்டம் 2025’ (சட்டம் 866)இன் படி, தங்கள் இணையப் பாதுகாப்புத் திட்டங்களை டிசம்பர் 28ஆம் தேதிக்குள் மலேசியத் தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
தகவல் தொடர்புத் துறை துணை அமைச்சர் டியோ நீ சிங், “பயனர்களுக்குப் பாதுகாப்பான மின்னிலக்கச் சூழலை உறுதி செய்வதற்காக, அந்தத் தளங்கள் செயல்படுத்த உத்தேசித்துள்ள நடவடிக்கைகள், மேம்பாடுகள் குறித்த விவரங்கள் இந்தத் திட்டங்களில் இடம்பெற வேண்டும் என்று தெரிவித்தார்.
தற்போதைய இடைக்கால அவகாசம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சமூக ஊடகத் தளங்கள் பயனர்களின் வயதைச் சரிபார்க்கும் நடைமுறைகளைச் செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“நாங்கள் இன்னும் இடைக்காலக் கட்டத்தில்தான் இருக்கிறோம். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத் தொடக்கத்தில் தளங்கள் இந்தக் கடப்பாட்டைச் செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம்.
“இடைக்காலக் கட்டம் முடிந்த பிறகு, தாங்கள் சரிபார்த்த, முடக்கிய கணக்குகளின் எண்ணிக்கை குறித்த அனைத்துத் தரவுகளையும் அவை எங்களிடம் சமர்ப்பிக்கும்,” என்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் கேள்வி-பதில் நேரத்தில் அவர் கூறினார்.
சமூக ஊடகத் தளங்கள் வயது சரிபார்ப்புத் தேவைகளுக்கு இணங்குகின்றனவா என்பது குறித்து வோங் ஷு கி (பக்கத்தான் ஹரப்பான்-குளுவாங்) எழுப்பிய கேள்விக்குத் துணை அமைச்சர் பதிலளித்தார். வயது சரிபார்க்கப்பட்ட, முடக்கப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கை, அத்துடன் தங்கள் கடமைகளை நிறைவேற்றத் தவறும் சேவை வழங்குநர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த விளக்கங்களை அவர் கோரியிருந்தார்.
மெட்டா, டிக்டாக், கூகல் உள்ளிட்ட சமூக ஊடகச் சேவை வழங்குநர்கள், வயது சரிபார்ப்பு வழிமுறைகளைச் செயல்படுத்துவதை உறுதி செய்யுமாறு மலேசியத் தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம் அவற்றுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக திருவாட்டி டியோ தெரிவித்தார். மேலும், இந்த இணக்கத்தன்மையைக் கண்காணித்து மதிப்பீடு செய்வதற்காக, அது தொடர்பான தகவல்களை வழங்குமாறும் அந்த ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இணையப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றத் தவறும் உரிமம் பெற்ற சேவை வழங்குநர்கள் மீது அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று திரு டியோ தெரிவித்தார். இதில் 1 மில்லியன் ரிங்கிட் வரையிலான அபராதம், குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகு, அக்குற்றம் தொடரும் ஒவ்வொரு நாளுக்கும் கூடுதலாக 100,000 ரிங்கிட் வரையிலான அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
