வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சுவிட்சர்லந்தில் சனிக்கிழமை (மே 10) சீனாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக இருந்தது என்று கூறியுள்ளார். இருதரப்பும் நட்பார்ந்த விதத்திலும் ஆக்கபூர்வமாகவும் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டார்.
“சீனாவுடன் சுவிட்சர்லாந்தில் இன்று ஒரு நல்ல சந்திப்பு நடந்தது. பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாடினோம். பலவற்றில் இணக்கம் ஏற்பட்டது,” என்று திரு டிரம்ப் தமது ட்ருத் சோஷல் தளத்தில் பதிவிட்டார்.
மேலும் அவர், “சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் நன்மையளிக்கும் வகையில் அமெரிக்க வர்த்தகங்களை சீனா வரவேற்பதை நாங்கள் காண விரும்புகிறோம். பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளோம்!” என்று குறிப்பிட்டார்.
இருப்பினும் என்ன முன்னேற்றம் என்பது குறித்து திரு டிரம்ப் விரிவாகப் பேசவில்லை.
இதற்குமுன் உலகப் பொருளியலைச் சீர்குலைக்கூடிய வர்த்தகப் போரைக் தவிர்க்கும் நோக்கில் நடைபெற்ற கலந்துரையாடலை முடித்துக்கொண்டு மே 11ஆம் தேதி சமரசப் பேச்சுவார்த்தையைத் தொடங்க அமெரிக்க, சீன உயர் அதிகாரிகள் திட்டமிட்டதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின.
சீனத் துணைப் பிரதமர் ஹி லிஃபெங், அமெரிக்க நிதியமைச்சர் ஸ்கோட் பெஸண்ட்டையும் வர்த்தக அமைச்சர் ஜேமிசன் கிரீயரையும் நேரடியாகச் சந்தித்து கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் பேசினார்.
கூட்டம் முடிந்து இருதரப்பும் எதுபற்றி கலந்துரையாடியது என்ற விவரங்களை வெளியிடவில்லை, வரிகளைக் குறைப்பதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தவும் இல்லை.
திரு டிரம்பின் வரி விதிப்பு அறிவிப்பால் அதிகரித்த பதற்றத்தைத் தொடர்ந்து பல வாரங்கள் கழித்து திரு பெஸண்ட், திரு கிரீயர், திரு ஹி ஆகிய மூவரும் சந்திக்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
பெய்ஜிங்கும் பதிலுக்கு வரிகள் விதித்ததை அடுத்து 600 மில்லியன் டலர் மதிப்புள்ள வருடாந்திர இருதரப்பு வர்த்தகம் நிலைக்குத்தியது.
ஏப்ரலில் திரு டிரம்ப் கூடுதல் நாடுகள்மீது வரி விதிக்கப்போவதாக முடிவெடுத்ததுடன் கூடிய வர்த்தகப் பூசல் பல விநியோக தொடர்களில் தடங்கல் ஏற்படுத்தியதுடன் உலகப் பொருளியலை மிகவும் கடுமையான வகையில் பாதிக்கும் என்ற பீதியைக் கிளப்பியது.
சுவிட்சர்லாந்தின் அரசதந்திர நடுவத்தில் இடம்பெறும் பேச்சுவார்த்தைகள் பகிரங்கமாக அறிவிக்கப்படவில்லை.
எனினும், இருநாட்டுப் பேராளர்களும் ஐக்கிய நாட்டு நிறுவனத்துக்கான சுவிட்சரலாந்து தூதரின் இடத்திற்குத் திரும்பியதைச் சிலர் பார்த்தனர்.
இதற்குமுன் திரு பெஸண்ட், திரு கிரீயர் உள்ளிட்ட அமெரிக்க அதிகாரிகளும் தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து பேச்சுவார்த்தைக் கிளம்பியதையும் காண முடிந்தது. திரு பெஸண்ட் செய்தியாளர்களிடம் பேச மறுத்துவிட்டார்.