ஆசியப் பணக்காரக் குடும்பங்களின் வாரிசுத் திட்டமிடல் போதுமான அளவுக்கு இல்லை

1 mins read
5d687500-88c8-4ae0-adbb-45689733f3c0
ஆசியாவின் முதல் தலைமுறைப் பணக்காரர்களில் ஏறத்தாழ 50 விழுக்காட்டினர் தங்கள் வாரிசுகளைப் பற்றி முடிவெடுக்கவில்லை என்று ஆய்வுமூலம் தெரியவந்துள்ளது. - படம்: சாவ்பாவ்

ஆசியாவில் உள்ள பணக்காரக் குடும்பங்களின் சொத்து பெருகி வருகிறது. 2029ஆம் ஆண்டுக்குள் அது 99 டிரில்லியன் அமெரிக்க டாலரை (S$129 டிரில்லியன்) எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், இப்பணக்காரக் குடும்பங்களின் வாரிசுத் திட்டமிடல் போதுமான அளவுக்கு இல்லை என்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசியாவின் முதல் தலைமுறைப் பணக்காரர்களில் ஏறத்தாழ 50 விழுக்காட்டினர் தங்கள் வாரிசுகளைப் பற்றி முடிவெடுக்கவில்லை என்று ஆய்வுமூலம் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வை யுஓபி தனியார் வங்கி, பாஸ்டன் ஆலோசனைக் குழு, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்தின.

வேறு வழி இல்லாதபோது மட்டுமே இவர்கள் வாரிசுத் திட்டமிடலில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர்களில் 37 விழுக்காட்டினர் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்படும்போது மட்டுமே வாரிசுத் திட்டமிடலைப் பற்றி நினைக்கின்றனர்.

வாரிசுத் திட்டமிடலுக்கு வர்த்தகச் சூழல் அமையும்போது மட்டுமே 43 விழுக்காட்டினர் அதைப் பற்றிச் சிந்திக்கின்றனர்.

ஆசியச் சந்தைகளில் உள்ள 228 பெருஞ்செல்வந்தர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வில் பங்கெடுத்த 46 குடும்ப வர்த்தக நிறுவனர்களில் 91 விழுக்காட்டினர், தலைமைத்துவத்தைத் தங்கள் குடும்பத்துக்குள் வைத்திருக்க விரும்புகின்றனர்.

நிறுவனத்தை வழிநடத்துவதில் தங்கள் பிள்ளைகளுக்கு ஆர்வம் இல்லை என்று ஆய்வில் 28 விழுக்காட்டினர் கூறினர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட வாரிசுகள் நிறுவனத்துக்குத் தலைமை தாங்கத் தயாராக இல்லை என்று 24 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்