பிலிப்பீன்சில் திடீர் நிலச்சரிவு, பெருவெள்ளம்: 12 பேர் பலி

பிலிப்பீன்சில் திடீர் நிலச்சரிவு, பெருவெள்ளம்: 12 பேர் பலி

படம்: ஏஎஃப்பி

10 Aug 2026 - 3:14 pm

1 mins read

மணிலா: பிலிப்பீன்சில் இடைவிடாமல் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளத்திற்கு 12 பேர் உயிரிழந்தனர். மேலும் எட்டுப் பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டு சூறாவளிகளால் தீவிரமடைந்துள்ள தென்மேற்குப் பருவமழையால் 33 மாவட்டங்களைச் சேர்ந்த அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு, நிர்வாக மன்றம் தெரிவித்துள்ளது.

நூற்றுக்கணக்கான வீடுகளும் உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டது.

முக்கிய லூசான் தீவில் உள்ள மலைப்பாங்கான பகுதியான பாகியோ நகரத்தில், நிலச்சரிவில் பல வீடுகள் புதையுண்டதில் நான்கு பேர் உயிரிழந்தனர் என்றும் ஆறு பேரைக் காணவில்லை என்றும் அதன் பொதுத் தகவல் அலுவலகம் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

தொடர்ந்து பெய்யும் கனமழைக்கு மத்தியில் பாகியோ நகரில் மேலும் பல நிலச்சரிவுச் சம்பவங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தேடி மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கிட்டத்தட்ட 150 மீட்புப் பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருவதாகவும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக நகரங்களும் முக்கியச் சாலைகளும் வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றன. இந்த நிலையில் மணிலாவிலும் பல மாகாணங்களிலும் உள்ள பள்ளிகளுக்கு மாற்று கற்றல் முறைகளை நடைமுறைப்படுத்த அதிபர் பெர்டினாண்ட் மார்க்கோஸ் ஜூனியர் ஆகஸ்ட் 10 அன்று உத்தரவிட்டார். அரசு ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரியுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
மழைவெள்ளம்நிலச்சரிவுபிலிப்பீன்ஸ்