நூவாகோட்: நேப்பாள-திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை குறைந்தது 160 பேர் உயிரிழந்துவிட்டனர்.
மேலும் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை என்பதால் மீட்புக் குழுவினர் தேடுதல் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். சீன எல்லைப் பகுதியில் புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 26) பதிவான கண்காணிப்பு கேமரா காட்சியில், பல அடுக்குமாடிக் கட்டடங்களை வெள்ளநீர் அடித்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
கரைபுரண்டோடிய வெள்ளத்திலிருந்து வாகனங்களும் தப்பவில்லை. போதே கோசி, திரிசூலி ஆகிய இரு ஆறுகளின் பாதையில் அமைந்த கிராமங்களையும் நகரங்களையும் வெள்ளம் கடுமையாகப் பாதித்துள்ளது.
“என் மைத்துனர் தொலைபேசியில் அழைத்துக் கதறி அழுதார். அவர்களது வீட்டை வெள்ளம் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதாக அவர் கூறினார். மூவர் மீட்கப்பட்டபோதிலும் அவருடைய சகோதரரைக் காணவில்லை,” என்று பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த ராஜு படேல் என்பவர் வேதனையுடன் தெரிவித்தார்.
நேப்பாளக் காவல்துறை இதுவரை 157 உடல்களை மீட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதனிடையே, திபெத்தின் எல்லைப் பகுதியான கியிரோங்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் மூவர் உயிரிழந்ததாகவும் 265 பேரைக் காணவில்லை என்றும் சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மீட்புப் பணிகளுக்காகத் திபெத் அரசு ஏறத்தாழ 800 அவசரகால ஊழியர்களையும் 150 வாகனங்களையும் மோப்ப நாய்கள் மற்றும் வேகப் படகுகளையும் களமிறக்கியுள்ளது.
காணாமல் போனவர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் ஆவர். பாதிக்கப்பட்ட 403 சுற்றுப்பயணிகளில் 341 பேர் வெளிநாட்டினர் என்று நேப்பாளச் சுற்றுலாத் துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
காணாமல் போன வெளிநாட்டினரில் 142 இந்தியர்களும் அடங்குவர். பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட இடிபாடுகளின் கடுமையான ஓட்டமே இந்தப் பேரழிவுக்குக் காரணம் என்று அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
“முழு கிராமங்களும் சந்தைப் பகுதிகளும் முற்றிலுமாக அழிந்துவிட்டன,” என்று அனைத்துலகச் செஞ்சிலுவை, செம்பிறைச் சங்கங்கள் கூட்டமைப்பின் நேப்பாளத் தலைவர் டேவிட் ஃபிஷர் கவலை தெரிவித்தார்.
ஆற்றின் மேல்பகுதியில் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக, இரண்டாவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
தென் ஆசியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழைக் காலத்தில் வெள்ளமும் நிலச்சரிவும் இயல்பானவை என்றாலும், பருவநிலை மாற்றமே இத்தகைய தீவிர வானிலைக்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.


