மன்னர் முஹ்ரிஸ் ஆட்சியாளராகத் தொடர்கிறார்: நெகிரி செம்பிலான் நீதி, பாரம்பரிய மன்றம்

மன்னர் முஹ்ரிஸ் ஆட்சியாளராகத் தொடர்கிறார்: நெகிரி செம்பிலான் நீதி, பாரம்பரிய மன்றம்

1 mins read
f969b4ee-ce52-45e7-99d4-2d863a14381d
மன்னர் முஹ்ரிஸ் முனாவீர் சட்டபூர்வ ஆட்சியாளராகவும் மன்றத் தலைவராகவும் தொடர்ந்து நீடிக்கிறார் என்றும் அப்பதவி காலியாக இல்லை என்றும் நெகிரி செம்பிலான் நீதி, பாரம்பரிய மன்றம் வலியுறுத்தியுள்ளது. - படம்: மலாய் மெயில்

செரம்பான்: நெகிரி செம்பிலான் ஆட்சியாளரைப் பதவியிலிருந்து நீக்கும் நோக்கில், செப்டம்பர் 5ஆம் தேதியிடப்பட்ட ஆவணத்தில் கையெழுத்திட்ட ஆறு நபர்கள், பாரம்பரியச் சட்டப்படி தேசத்துரோகமாகச் செயல்பட்டுள்ளனர் என நெகிரி செம்பிலான் நீதி, பாரம்பரிய மன்றம் அறிவித்துள்ளது.

கையெழுத்திட்டவர்களில் நால்வர் தாங்கள் உரிமை கோரிய பதவிகளில் இல்லை என்றும் அவர்கள் அரசாங்க அதிகாரிகளுக்குச் சட்டவிரோத உத்தரவுகளைப் பிறப்பித்ததுடன், மாநில அரசியலமைப்பின்கீழ் தேவைப்படும் கட்டாய விசாரணை எதுவுமின்றி ஆட்சியாளர் முஹ்ரிஸ் முனாவீரைப் பதவியிலிருந்து நீக்க முயன்றனர் என்றும் அது கூறியது.

செப்டம்பர் 5ஆம் தேதியிட்ட ஆவணத்தின் அடிப்படையிலான எந்தவோர் உத்தரவின் பேரிலும் அரசாங்க அதிகாரிகள் செயல்படக்கூடாது என்று உத்தரவிட்ட மன்றம், மன்னர் முஹ்ரிசைத் தொடர்ந்து ஆட்சியாளராக அங்கீகரிக்குமாறு மாநில நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.

மேலும், செப்டம்பர் 5ஆம் தேதியிடப்பட்ட ஆவணத்தில் நால்வர் தாங்கள் பிரதிநிதிப்பதாகக் கூறிய பதவிகளை வகிக்காமலேயே கையெழுத்திட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, அந்த ஆறு நபர்களுக்கு எதிராகக் காவல்துறையில் புகார் அளிக்குமாறு தனது செயலாளருக்கு மன்றம் உத்தரவிட்டது.

அதோடு, மாநில அரசாங்கத்தின்கீழ் சமரசக் குழு ஒன்றை அமைப்பதற்கான திட்டம் குறித்தும் அது கவலை தெரிவித்தது. பாரம்பரிய வழக்க முறைகள் சார்ந்த விவகாரங்கள் நெகிரி செம்பிலான் அரசியலமைப்பின் 16வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, முற்றிலும் தனது அதிகார வரம்பிற்குள் மட்டுமே வருவதாக அது கூறியது.

அக்குழுவின் அதிகார வரம்புகள் குறித்து மாநில அரசாங்கத்திடம் விளக்கம் கோரப்படும் என்றும் மன்றம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்