அணுவாயுதக் குறைப்பு, உலக அமைதி வலியுறுத்தலுடன் உச்சநிலை மாநாடு நிறைவு

அணுவாயுதக் குறைப்பு, உலக அமைதி வலியுறுத்தலுடன் உச்சநிலை மாநாடு நிறைவு

படம்: ராய்ட்டர்ஸ்

19 Nov 2026 - 8:51 pm

3 mins read

ஷென்சென்: அணுவாயுதங்களைக் கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகளை வகுக்கவும் உக்ரேன், ஈரான் ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் போர்களுக்குத் தீர்வு காண்பதைத் தொடங்கவும் வாய்ப்பளிக்கும் வகையில் அமைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சநிலை மாநாட்டில், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீன அதிபர் ஸி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் ஆகியோர் வியாழக்கிழமையன்று (நவம்பர் 19) சந்தித்துப் பேசினர்.

”நாங்கள் உண்மையிலேயே வரலாறு படைக்கிறோம்,” என்று அதிபர் டிரம்ப் கூறினார்.

அணுவாயுதங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்தும் அந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் அபாயத்தைக் குறைப்பது குறித்தும் விவாதிக்க அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் தனித்துவமான நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனத்திடம் அதிபர் ஸி பேசினார்.

“அணுவாயுதப் போரில் எவரும் வெல்ல முடியாது. அது ஒருபோதும் நடத்தப்படவும் கூடாது. அணுவாயுதப் போரைத் தடுக்கவும் அணுவாயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தைக் கடைப்பிடிக்கவும் உலகளாவிய உத்திபூர்வ நிலைத்தன்மையைப் பேணவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையே, உக்ரேன் விவகாரம் குறித்து பேசிய ரஷ்ய அதிபர் புட்டின், உக்ரேன் பூசல் உள்ளிட்ட வட்டாரப் பூசல்களுக்குத் தீர்வு காண்பதில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்குப் பல பொது நலன்கள் இருப்பதாகத் தெரிவித்தார்.

“சக்திவாய்ந்த நாடுகள் நல்லிணக்கத்துடன் இருக்கும்போது உலகம் அமைதியாக இருக்கும். அவை ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டால் உலகில் குழப்பம் ஏற்பட்டு கொந்தளிப்பான சூழல் எழுகிறது என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது,” என்று அதிபர் ஸி தெரிவித்தார்.

இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றவர்கள் என்ற வகையில் ரஷ்யா, சீனா, அமெரிக்காவின் பொதுவான வரலாற்றை நினைவுகூர்ந்த அதிபர் புட்டின், அனைத்துலக அமைதியைப் பேணுவதில் தங்களுக்குக் கூட்டுப் பொறுப்பு இருப்பதாகவும் கூறினார்.

உக்ரேன், ஈரான், அணுவாயுதங்கள், வர்த்தகம் ஆகிய விவகாரங்களில் உலகின் மூன்று வலிமைமிக்க நாடுகளுக்கு இடையே ஆழமான கருத்து வேறுபாடுகள் நிலவுவதால், இந்த முத்தரப்புச் சந்திப்பில் பெரிய அளவிலான உடன்பாடுகள் எட்டப்படும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கவில்லை.

இருப்பினும், உக்ரேன் அல்லது ஐரோப்பாவைத் தாண்டி உக்ரேனைப் பாதிக்கும் முடிவுகளை எடுப்பதன் மூலம் இந்த மூன்று தலைவர்களும் உலகைத் தங்களது செல்வாக்கு மண்டலங்களாகப் பிரிக்க விரும்புகிறார்கள் என்ற அச்சம் சிறிய நாடுகளிடையே எழுந்துள்ளதாக அறியப்படுகிறது.

முத்தரப்புக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, சீன அதிபர் ஸியுடன் அதிபர் டிரம்ப் தனியாக ஒருவருடன் ஒருவர் நேரடிப் பேச்சு நடத்தினார். 2026ஆம் ஆண்டில் அதிபர் ஸியுடன் அவர் நடத்திய மூன்றாவது முக்கியச் சந்திப்பு இதுவாகும்.

தங்களது நட்பையும், ஈரான் போரில் முக்கியத் தாக்குதல் இடமாக மாறியுள்ள ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கொண்டு செல்லப்படுவதில் தங்களுக்குள்ள பொது நலனையும் அதிபர் டிரம்ப் பாராட்டினார்.

அமெரிக்காவிலிருந்து அதிக அளவில் வேளாண் பொருள்களை வாங்குமாறு அதிபர் ஸியிடம் வலியுறுத்தப் போவதாகத் தெரிவித்தார் அதிபர் டிரம்ப், “அமெரிக்க விவசாயிகள் பலனடையும் வகையில் செயல்படுமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அதிபர் ஸியிடம் அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டார்.

அதிபர் டிரம்ப்பின் பதவிக்காலத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு பொதுவாக நிலையாகவும் மேம்பட்டும் உள்ளதாக அதிபர் ஸி தெரிவித்தார்.

“நீங்கள் எடுத்த முயற்சிகள் அனைவரும் பார்க்கும் வகையில் உள்ளன, அவை வரலாற்றில் இடம்பெறும்,” என்று அதிபர் டிரம்ப்பிடம் தெரிவித்தார் அதிபர் ஸி.

குறிப்புச் சொற்கள்