கோலாலம்பூர்: சன்வே நகரில் உள்ள சன்வே மருத்துவ மையம் (எஸ்எம்சி), மலேசியாவின் முதல் நிலை அறிவார்ந்த மருத்துவமனை என்ற தனது நிலையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதன் மூலம், நியூஸ்வீக்கின் ‘உலகின் சிறந்த அறிவார்ந்த மருத்துவமனைகள் 2027’ பட்டியலில், 2026ல் 313வது இடத்தில் இருந்த தனது உலகளாவிய தரவரிசையை மேம்படுத்தி, 226வது இடத்திற்கு அது முன்னேறியுள்ளது.
இந்த அங்கீகாரம், சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், புதுமையான தீர்வுகள் மூலம் மருத்துவ, சேவைத் திறன்களை வலுப்படுத்துவதற்கும் குழுமம் கொண்டுள்ள நீண்டகால அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது என்று சன்வே சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்தின் தலைவர் லாவ் பெங் டோங் கூறினார்.
“மலேசியாவின் முதல்நிலை அறிவார்ந்த மருத்துவமனையாகவும், உலக அளவில் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றாகவும் அங்கீகரிக்கப்படுவது, உள்கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவ, சேவைத் திறன்களில் சிறந்து விளங்குவதற்கும், புதுமையான தீர்வுகளைப் பயன்படுத்துவதற்கும் சன்வே சுகாதாரப் பராமரிப்புக் குழுமம் கொண்டுள்ள நீண்டகால அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.
“மலேசியாவிலும் வட்டாரத்திலும் தரமான மருத்துவச் சேவைகளின் எதிர்கால வளர்ச்சியை மேலும் முன்னெடுத்துச் செல்ல உதவும் ஓர் ஒருங்கிணைந்த சுகாதாரப் பாதுகாப்புச் சூழலமைப்பை உருவாக்குவதற்கான எங்கள் குறிக்கோளுக்கு இந்த முன்னுரிமைகள் அடித்தளமாக அமைகின்றன,” என்று அவர் வியாழக்கிழமை (நவம்பர் 5) ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இதற்கிடையே, நோயாளிகளின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், செயல்திறனை மேம்படுத்தவும், நோயாளிகளின் அனுபவத்தை மேம்படுத்தவும் மருத்துவமனை மின்னிலக்கத் திறன்களைப் பயன்படுத்துவதாக எஸ்எம்சி தலைமை நிர்வாக அதிகாரி எரிகா லாம் கூறினார்.
எஸ்எம்சியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில்நுட்பங்களில், அதன் வெளிநோயாளி மருந்தகத் தானியக்க அமைப்பு, உள்நோயாளி மருந்தகத் தானியக்க அமைப்பு ஆகியவை அடங்கும். இவை, செயல்திறனை மேம்படுத்தவும் நோயாளிகளின் பாதுகாப்பிற்கு ஆதரவளிக்கவும் மருந்து வழங்கும் முறையை நெறிப்படுத்துகின்றன.
இந்த மருத்துவமனை, மருத்துவப் பணிப்பாய்வுகளைத் தானியக்கமாக்கவும், கதிர்வீச்சு அளவுகளை உகந்ததாக்கவும், குறைந்த கதிர்வீச்சு வெளிப்பாட்டுடன் மிகத் தெளிவான படங்களைப் பெறுவதற்காகச் சிக்கலான படத் தரவுகளைச் செயலாக்கவும் செயற்கை நுண்ணறிவை உள்ளடக்கிய, நாட்டின் முதல் ஒளித்துகள்-எண்ணும் ‘சிடி’ ஸ்கேனரையும் பயன்படுத்துகிறது.
