உலகிலேயே இவ்வாண்டின் ஆகச் சக்திவாய்ந்த வெப்பமண்டல சூறாவளியான ரகாசா, ஹாங்காங் நகரைப் புயல் காற்றுடனும் கடும் மழையுடனும் செப்டம்பர் 24 (புதன்கிழமை) தாக்கியுள்ளது. நகரமே செயலற்ற நிலையில், 700க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் ரத்தாகியுள்ளன.
ஆசியாவின் நிதி மையமான ஹாங்காங்கின் கிழக்கு, தெற்குக் கரையோரங்களில் பேரலைகள் கரைபுரள்வதால் அதிகாரிகள், மக்களை வெளியில் வரவேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.
மணிக்கு சுமார் 200 கி.மீட்டர் வேகத்தில் வீசும் பலத்த காற்று, புதன்கிழமை அதிகாலை நகரின் தெற்கு வட்டாரத்தை 100 கி.மீட்டர் அளவில் சுற்றிவளைக்கும் என்று கூறப்பட்டது.
சீனாவின் 125 மில்லியன் மக்கள் வசிக்கும் குவாங்டோங் மாநிலத்தை சூறாவளி வியாழக்கிழமைக்குள் (செப்டம்பர் 25) சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 22, 23 ஆகிய தேதிகளில், முறையே பிலிப்பீன்ஸின் வடபகுதி, தைவான் ஆகிய இரு வட்டாரங்களும் ரகாசாவின் சீற்றத்தை எதிர்கொண்டன.
சூறாவளியினால் கடைகள் சில நாள்கள் மூடப்படும் என்ற அச்சத்தில், மக்கள் இவ்வாரம் பலமணி நேரங்கள் காத்திருந்து அத்தியாவசியப் பொருள்களை பேரங்காடிகளில் வாங்கிக் குவித்தனர். கண்ணாடிச் சன்னல்கள் உடையும் என்ற பயத்தில் பலர் அவற்றை பாதுகாப்பாக இருக்க பசைப்பட்டைகளை (டேப்) வைத்து ஒட்டிவருகின்றனர்.
ஹாங்காங் அரசாங்கம் சூறாவளி எச்சரிக்கை நிலையை 10க்கு உயர்த்தியதால், வர்த்தகங்களும் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளன. சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் செம்மஞ்சள் (ஆரஞ்சு) நிறத்துக்கு மழைக்கான சமிக்ஞை அறிவிக்கப்பட்டுள்ளது. மதியத்துக்குள் நீர்மட்டம் நான்கு மீட்டருக்கு உயரும் என வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமையன்று, சூறாவளியைக் காண கடற்கரைக்குச் சென்ற தாயும் மகனும் அலைகளுக்குள் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்கள் காப்பாற்றப்பட்டு, மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக ‘சவுத் சைனா மார்னிங் போஸ்ட்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஹாங்காங்கின் 49 தற்காலிக நிவாரண முகாம்களில் 727 பேர் தஞ்சம் புகுந்துள்ளனர்.