சென்னை: ஊழல் புகார் தொடர்பில் முன்னாள் தமிழக அமைச்சர் கே.என் நேரு சம்பந்தப்பட்ட 25 இடங்களில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியுள்ளதாக தமிழக ஊடகங்கள் வியாழக்கிழமை (அக்டோபர் 30) செய்தி வெளியிட்டுள்ளன.
திமுகவின் திரு.கே.என் நேரு மீது 634 கோடி ரூபாய் ஊழல் புகார் செய்யப்பட்டுள்ளதால் அதன் விசாரணையின் அங்கமாக இச்சோதனைகள் இடம்பெற்றன.
சோதனையில் முன்னாள் அமைச்சருடன் தொடர்பில் உள்ளவர்களுக்குச் சொந்தமான இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் விசாரணைகள் நடத்தினர். அவ்விடங்களில் இருந்து பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முன்பாக, தமிழ்நாட்டில் நடந்த திமுக ஆட்சியில் நகராட்சி, குடிநீர், சாலைக் கட்டுமானம் போன்ற பல பணிகளுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டுகளும் புகார்களும் எழுந்தன.
அப்போது, அவைமீது வழக்குகள் பதிவுசெய்யும்படி மத்திய அரசின் அமலாக்கத்துறை தமிழக அரசுக்கு ஆவணச் சான்றுகளையும் புகைப்படங்களையும் அனுப்பியிருந்தது.
அந்தக் கோரிக்கைகளின் அடிப்படையில் தமிழ்நாட்டுக் காவல்துறை தற்போதைய விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
மத்திய அரசு வெளியிட்ட விசாரணைக்கான கோரிக்கைக் கடிதங்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிமுகவைச் சேர்ந்த இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறை விசாரணை நடத்தும்படி தீர்ப்பு வழங்கியிருந்தது.
எனவே, பணி நியமனம் தொடர்பான 634 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உட்பட அவரைச் சேர்ந்தோர் குறித்து தமிழ்நாட்டின் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்குக்கு எதிராக திரு கே.என்.நேரு சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த சீராய்வுமனு தள்ளுபடி செய்யப்பட்டது.
