என்விடியா ‘சிஇஓ’க்கு எதிரான உளவுவலை சந்தேகம்; விசாரணை தீவிரம்

என்விடியா ‘சிஇஓ’க்கு எதிரான உளவுவலை சந்தேகம்; விசாரணை தீவிரம்

படம்: ஏஎஃப்பி

09 Nov 2026 - 8:14 pm

2 mins read

சான் ஃபிரான்சிஸ்கோ: என்விடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் வெளிநாட்டு உளவு நடவடிக்கைகளின் இலக்காக இருந்தாரா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக அந்நிறுவனம் ஞாயிற்றுக்கிழமையன்று (நவம்பர் 8) தெரிவித்தது.

சீனாவுக்குத் தகவல்களை வழங்கியதாகக் கூறப்படும் சீனத் தொழிலதிபருடன் அவர் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக ஊடகச் செய்தி ஒன்று வெளியானதைத் தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

ஹுவாங் ஊழியர்களுக்கு அனுப்பிய செய்தியில், தாம் தமது மனைவிக்கு உண்மையற்றவராக நடந்துகொண்டதை ஒப்புக்கொண்டதுடன், தனது செயல்களுக்கு முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். அதே நேரத்தில், எந்தவொரு தடையுமின்றி நிறுவனத்தைத் தொடர்ந்து வழிநடத்துவதில் தலைமை நிர்வாக அதிகாரி உறுதியாக இருப்பதாக என்விடியா கூறியுள்ளது.

அமெரிக்க அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு, புலன்விசாரணை வளையத்தில் உள்ள சிங்கப்பூரை தளமாகக் கொண்ட மெகாஸ்பீட் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகியான ஆலிஸ் ஹுவாங்குடன் ஜென்சனுக்குத் தொடர்பு இருந்ததாக ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் அக்டோபரில் செய்தி வெளியிட்டிருந்தது.

என்விடியா நிறுவனத்திடமிருந்து செயற்கை நுண்ணறிவு சில்லுகளை வாங்கி வரும் மெகாஸ்பீட் நிறுவனம், சீனாவுக்கு ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்பட்ட அதிநவீன ‘ஏஐ’ சில்லுகளைப் பெற அந்நாட்டுக்கு உதவியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் அமெரிக்க அதிகாரிகள் அதனைத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

அமெரிக்க தேசியப் பாதுகாப்போ அல்லது என்விடியாவின் வர்த்தக ரகசியங்களோ சமரசம் செய்யப்பட்டுள்ளதாக நம்புவதற்குத் தங்கள் இயக்குநர் சபைக்கு எந்தக் காரணமும் இல்லை என்றும் இருப்பினும் தங்களின் இந்த விசாரணை கிடைக்கக்கூடிய அனைத்துத் தகவல்களையும் விரிவாகப் பரிசீலிக்கும் என்றும் ஞாயிற்றுக்கிழமையன்று நிறுவனம் கூறியுள்ளது.

தலைமை நிர்வாக அதிகாரி, அவரது தலைமை நிர்வாகக் குழுவின் மீது இயக்குநர் சபை முழு நம்பிக்கை கொண்டுள்ளது என்று என்விடியா தெரிவித்தது. மேலும், இந்த மறுஆய்வு விசாரணைக்கு திரு ஹுவாங் தமது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளதாகவும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்துள்ளதாகவும் கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்