சுவீடனில் சிறாருக்கான புதிய சிறை விதிமுறைகள் அறிமுகம்

சுவீடனில் சிறாருக்கான புதிய சிறை விதிமுறைகள் அறிமுகம்

2 mins read
1a2a04a3-bba2-4e48-afc1-4beb181e91da
குற்றச் செயல்களுக்குப் பொறுப்பேற்கும் வயதை 15லிருந்து 13ஆகக் குறைப்பதாக சுவீடன் அரசு 2026 ஜனவரியில் அறிவித்தது. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

ஸ்டாக்ஹோம்: கடுமையான குற்றங்களுக்காகத் தண்டிக்கப்படும் சிறுவர்களுக்கான (ஆக இளம் வயது 13) சிறைத்தண்டனை எப்படி இருக்கும் என்பது குறித்த புதிய விதிமுறைகளை சுவீடன் வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 19) வெளியிட்டது.

ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ள இந்தச் சீர்திருத்தம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

அதிகரித்து வரும் குற்ற விகிதங்களைக் கட்டுப்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்துவரும் சுவீடனின் வலதுசாரி அரசாங்கம், குற்றச் செயல்களுக்குப் பொறுப்பேற்கும் வயதை 15லிருந்து 13ஆகக் குறைப்பதாகக் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது. இதற்குத் தீவிர வலதுசாரி சுவீடன் ஜனநாயகக் கட்சி ஆதரவு அளிக்கிறது.

இந்த மாற்றம் குறித்து அரசாங்கம் ஆலோசனை நடத்திய 126 அதிகார அமைப்புகளில் காவல்துறை, சிறைத்துறை உள்ளிட்ட பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன அல்லது கடுமையாக விமர்சித்தன. இருப்பினும், அரசாங்கம் தனது திட்டத்தை முன்னெடுத்துச் சென்றுள்ளது.

குண்டர் கும்பல்களுக்கிடையிலான மோதல்கள் மற்றும் போதைப்பொருள் சந்தையைக் கட்டுப்படுத்துவதற்கான போட்டிகளால் ஏற்படும் திட்டமிட்ட வன்முறைக் குற்றங்களைக் கட்டுப்படுத்த சுவீடன் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகிறது.

பிடிபட்டால் சிறைத்தண்டனை விதிக்கப்படாது என்பதைச் சாதகமாக்கிக்கொண்டு, 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வெடிகுண்டுத் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு இந்த உலகளாவிய நிழல் கும்பல்கள் இணையம் வழியாக அதிக அளவில் வேலைக்கு அமர்த்துகின்றன. அதற்கு, அவர்களுக்கு அதிக ஊதியம் வழங்குவதாகவும் சொல்லப்படுகிறது.

தற்போதுள்ள எட்டு சிறைகளில் சிறுவர்களுக்காகச் சிறப்புப் பிரிவுகளைத் தயார்செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் மூன்று பிரிவுகள் இந்தச் சீர்திருத்தம் நடைமுறைக்கு வரும் ஜூலை 1ஆம் தேதிக்குள் திறக்கப்படும் என்று அரசாங்கம் வியாழக்கிழமை (பிப்ரவரி 19) தெரிவித்தது.

அத்தகைய சிறுவர்கள் தங்களைவிட வயதில் மூத்த கைதிகளிடமிருந்து பிரிக்கப்படுவர். மேலும், சிறையில் அடைக்கப்படும் பெரியவர்கள் இரவு நேரங்களில் 14 மணி நேரம் சிறையறைக்குள் அடைக்கப்படும் நிலையில், சிறைத் தண்டனை விதிக்கப்படும் சிறுவர்கள் இரவு நேரங்களில் 11 மணி நேரம் மட்டுமே சிறையறைகளுக்குள் அடைக்கப்படுவர் என்று சுவீடனின் நீதி அமைச்சர் கன்னர் ஸ்ட்ரோமர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்