கிரேன்ஸ்-மான்டெனா: சுவிட்சர்லாந்தின் கிரேன்ஸ் மான்டெனா நகரில் புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்து தொடர்பாக ஆல்பைன் ஸ்கீ சொகுசு விடுதி நடத்துநர்கள் மீது குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
அந்தத் தீச்சம்பவத்தில் கிட்டத்தட்ட 40 பேர் உயிரிழந்தனர்; 119 பேர் காயமடைந்தனர். அவர்களில் பலர் பதின்ம வயதினர். பலரது உடல்நிலை மோசமாக உள்ளது.
முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, கவனக்குறைவினால் மரணம் விளைவித்தது, உடலைக் காயப்படுத்தியது, கவனக்குறைவினால் பேரிழப்பை ஏற்படுத்திய தீக்குக் காரணமாக இருந்தது முதலிய குற்றங்கள் குறித்து ஜனவரி 2ஆம் தேதி விடுதியின் இரு இயக்குநர்களுக்கு எதிராகக் குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டதாக காவல்துறை அறிக்கை தெரிவித்தது.
சாத்தியமான சிறந்த மருத்துவச் சேவையை வழங்குவதும் இறந்தவர்களை அடையாளம் காண்பதுமே தற்போதைக்குத் தலையாய முன்னுரிமை என்று சுவிஸ் நீதி அமைச்சர் பீட் ஜான்ஸ் சனிக்கிழமை (ஜனவரி 3) தெரிவித்தார்.
“சட்ட அமலாக்க அதிகாரிகள்மீது அரசாங்கம் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளது,” என்ற அவர், மேல்விவரங்களை அளிக்க மறுத்துவிட்டார்.

