சூரிக்: சுவிட்சர்லாந்து நாடு பொருளாதாரத் தடைகளை விதிப்பதையோ அல்லது நேட்டோ அமைப்புடன் ஒத்துழைப்பதையோ தடுக்கும் வகையில், மிகவும் கடுமையான நடுநிலைமைக் கொள்கையை அமல்படுத்துவதற்கான ஒப்புதலை அளிப்பதா வேண்டாமா என்பது குறித்து வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
அந்நாட்டின் அரசியலமைப்பில் நடுநிலைமைக் கொள்கை மிகவும் கடுமையான முறையில் வரையறுக்கப்பட்டு சேர்க்கப்பட வேண்டுமா என்பது தொடர்பில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
1815ஆம் ஆண்டு நெப்போலியன் போர்கள் முடிவுக்கு வந்ததிலிருந்து சுவிட்சர்லாந்தின் நடுநிலைமை அனைத்துலக அளவில் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், அதை அரசாங்கம் எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.
வலசாரி சுவிஸ் மக்கள் கட்சி, உக்ரேன்மீதான படையெடுப்பைத் தொடர்ந்து ரஷ்யாமீது தடைகளை விதித்த பிறகு, நாட்டின் பாரம்பரிய நிலைப்பாடு பலவீனமடைந்துள்ளதாகக் கூறியுள்ளது.
வாக்கெடுப்புக்கு முன்னோடியாக, வெள்ளைச் சமாதானப் புறாக்களின் படங்களுடன் ‘போர் வேண்டாம், நடுநிலைமை வேண்டும்’ என்று மக்கள் வாக்களிக்க வலியுறுத்தும் விளம்பரப் பலகைகளுக்கான நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கருத்துக்கணிப்புகள் வாக்காளர்கள் பரிந்துரையை நிராகரிப்பார்கள் என்று சுட்டிக்காட்டுகின்றன.
அண்மைய ஆய்வொன்றில் 68 விழுக்காட்டினர் அதற்கு எதிராகவும் 31 விழுக்காட்டினர் அதற்கு ஆதரவாகவும் வாக்களிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
