கோலாலம்பூரில் முன்னாள் அமைச்சரின் மகன் தாக்கப்பட்ட விவகாரம்

மலேசியக் காவல்துறை 19 பேரிடம் வாக்குமூலம் பெற்றது

2 mins read
0095f77c-87b9-439e-b33b-7c28aa72a20d
மலேசியக் காவல்துறைத் தலைவர் முகம்மது காலிட் இஸ்மாயில் கோலாலம்பூரில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) செய்தியாளர் கூட்டமொன்றில் பேசினார். - படம்: மலாய் மெயில்

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் அமைச்சர் ரஃபிஸி ரம்லியின் மகன் ஊசியால் தாக்கப்பட்ட சம்பத்தின் தொடர்பில் காவல்துறை 19 பேரிடம் வாக்குமூலம் பெற்றிருப்பதாகக் காவல்துறைத் தலைவர் முகம்மது காலிட் இஸ்மாயில் தெரிவித்திருக்கிறார்.

குடும்பத்தினர், வாகன ஓட்டுநர், ஊழியர்கள் உட்பட வேறு சிலரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டதாக அவர் சொன்னார்.

மருத்துவமனையின் அறிக்கைக்காகக் காவல்துறை காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கோலாலம்பூரில் நேற்று (ஆகஸ்ட் 22) நடந்த செய்தியாளர் கூட்டத்தில் திரு காலிட் அந்த விவரங்களை வெளியிட்டார்.

“நல்ல வேளையாகச் சிறுவனின் உடல்நலம் நல்ல நிலையில் இருப்பதைப் போல் தோன்றுகிறது,” என்று அவர் சொன்னார்.

தாக்குதல் விவகாரம் குறித்த மேல் விவரங்களை வெளியிடத் திரு காலிட் மறுத்துவிட்டார்.

குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்த பலரின் கைப்பேசிகள் பொதுவாக வேறொருவரின் பெயரில் அல்லது வெளிநாட்டவரின் பெயரில் பதிவுசெய்யப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

விசாரணை தொடர்வதாகவும் தாக்குதல் நடத்தியவரைத் தொடர்ந்து தேடி வருவதாகவும் திரு காலிட் சொன்னார்.

புத்ராஜெயாவில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் இம்மாதம் (ஆகஸ்ட் 2025) 12ஆம் தேதி சம்பவம் நடந்தது. பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினரான திரு ரஃபிஸியின் 12 வயது மகன் திரவம் இருந்த ஊசியைக் கொண்டு தாக்கப்பட்டார்.

தமது மனைவியின் காரை மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்த இருவர், வாகனத்திலிருந்து மகனை இழுத்து ஊசியால் குத்தியதாகத் திரு ரஃபிஸி கூறினார்.

சம்பவத்திற்குப் பிறகு தமது மனைவிக்கும் தொலைபேசியில் மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகத் திரு ரஃபிஸி சொன்னார்.

திரு ரஃபிஸிக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாகச் சிலாங்கூர் காவல்துறை இதற்கு முன்னர் கூறியிருந்தது.

குறிப்புச் சொற்கள்