தைப்பே: தைவான் தலைநகர் தைப்பேயில் கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) நடந்த கத்திக்குத்துத் தாக்குதலில் மாண்ட மூவரில் ஒருவர் தாக்குதல்காரரைத் தடுக்க முயன்றவர்.
யு எனும் குடும்பப் பெயரைக் கொண்ட அந்த 57 வயது ஆடவர் தாக்குதல்காரரைத் தடுக்க முயன்றதாகவும் பின்னர் உயிரிழந்ததாகவும் தைப்பே மேயர் சியாங் வான்-அன்னை மேற்கோள்காட்டி தைப்பே டைம்ஸ் நாளேடு ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21) தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை, 27 வயது சாங் வென் புகைக்குண்டுகளை வீசிவிட்டு, கத்தியால் தாக்கியதில் மூவர் மாண்டனர். கிட்டத்தட்ட 11 பேர் காயமடைந்தனர்.
அவரைத் தடுக்க முயன்றபோது யுவிற்கு 5 சென்டிமீட்டர் ஆழமான காயம் ஏற்பட்டது. அந்தக் காயம் அவரது வலது நுரையீரல் முதல் இடப்பக்கம் இதயம் வரை நீண்டது என்று தைவான் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை தெரிவித்தது.
தைப்பே விரைவுப் போக்குவரத்து நிறுவனத்தின் காப்பீட்டுத் தொகையாக திரு யுவின் குடும்பத்தினருக்குக் கிட்டத்தட்ட S$205,000 வழங்கப்படும்.
சம்பவத்தில் காயமடைந்தோர், அவர்களின் குடும்பத்தினர், உயிரிழந்தோரின் குடும்பத்தினர்க்கு உளவியல் ஆலோசனையும் சட்ட ஆலோசனையும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வேளையில், சம்பவத்தில் பாதிக்கப்பட்டோரும் தாக்குதலின்போது ரத்தத்தைத் தொட நேர்ந்தோரும் எச்ஐவி பரிசோதனை மேற்கொள்ளும்படி தைவான் சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்டோரில் ஒருவர் எச்ஐவி கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டவர் என்பதால் இவ்வாறு அறிவுறுத்தப்படுவதாக தைப்பே டைம்ஸ் நாளேடு தெரிவித்துள்ளது.

