தைப்பே: மத்திய தைப்பே நகரில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) நடந்த கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதுடன் இதுவரை 11பேர் காயமடைந்துள்ளனர்.
அந்தத் தாக்குதலில் சிங்கப்பூரர் யாரும் காயமடையவில்லை எனவும் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் தைவானில் இயங்கும் சிங்கப்பூர் வர்த்தக அலுவலகம் சனிக்கிழமை (டிசம்பர் 20) ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.
கத்தியால் மக்களை வெறியுடன் தாக்கிய ஆடவர் காவல்துறையினர் பின்தொடர்ந்து வரும்போது, ஒரு கட்டடத்தில் இருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.
“உயிரிழந்துள்ளோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம். காயமுற்றோர் விரைவில் குணமடைவதையும் எதிர்பார்க்கிறோம்,” என்று தைப்பேயில் உள்ள சிங்கப்பூர் வர்த்தக அலுவலகம் அதன் பதிவில் வெளியிட்டுள்ளது.
தைவானில் தற்போது உள்ள சிங்கப்பூரர்களும் அங்கு பயணம் செய்யவிருப்போரும் உள்ளூர் நிலவரங்களை கண்காணித்து, அங்குள்ள ஊடகச் செய்திகளை அறிந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தைவான் அதிகாரிகளின் வழிகாட்டுதல்களை கேட்டு நடந்துகொள்ளும்படியும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
முழுமையான பயணக் காப்புறுதிகளை வாங்கிக்கொள்ளவும் வெளியுறவு அமைச்சின் https://eregister.mfa.gov.sg எனும் இணைய முகவரியில் பதிவு செய்துகொள்ளவும் சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உதவி நாடுவோர் தைப்பேயில் உள்ள சிங்கப்பூர் வர்த்தக அலுவலகத்தை நாடவும் 24 மணிநேரம் செயல்படும் வெளியுறவு அமைச்சின் சேவை அலுவலகத்தை தொடர்புகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
Singapore Trade Office in Taipei Emergency Tel: +886 953 532 638
MFA Duty Office: Tel: +65 6379 8800 / 8855(24-hour hotline)

