தைவான் சுதந்திர நாடு, சீனாவுடன் இணைய வாய்ப்பில்லை: பிரதமர் சொ

2 mins read
d6748c40-1954-442f-8a65-d2caafc2f20f
தைவான் தலைநகர் தைப்பே. படத்தில் பாரம்பரிய சீனக் கூரையுடன் அங்குள்ள ‘கிராண்ட் ஹோட்டல்’ காட்சி தருகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

தைப்பே: சீனாவின் மாநிலமாக இணைவது தைவானின் 23 மில்லியன் மக்களின் விருப்பமல்ல என்று அதன் பிரதமர் சொ ஜுங்-டாய் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 25) நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சீன அதிபர் ஸீ ஜின்பிங், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் தைவான் பற்றி நடத்தியுள்ள தொலைபேசி அழைப்புக்குப் பிறகு பிரதமர் சொ, தன் நாட்டின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின், தைவான் சீனாவுடன் மீண்டும் இணைக்கப்படுவது சீனாவின் உலகத் தொலைநோக்குப் பார்வையின் முக்கிய இலக்கு என்று அதிபர் ஸீ, அமெரிக்க அதிபருடன் நடந்த பேச்சுவார்த்தையில் கூறியுள்ளார்.

சீனாவின் இந்தக் கொள்கையை ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தைவானிய அரசாங்கம் முற்றிலும் நிராகரிக்கிறது.

“சீனக் குடியரசான தைவான், ஒரு இறையாண்மைமிக்க முழு சுதந்திர நாடு என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்,” என்று பிரதமர் சொ, அந்தத் தீவின் அதிகாரபூர்வ பெயரை செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுக் கூறினார்.

“எங்கள் நாட்டின் 23 மில்லியன் மக்களுக்கும் ‘மீண்டும் இணைவதில்’ மிகத்தெளிவாக விருப்பம் இல்லை,” என்று அவர் மேலும் கூறினார்.

தைவானின் அரசமைப்பு முறைப்படி, அன்றாட நடவடிக்கைகளுக்கு பிரதமர் பொறுப்பேற்கிறார். தற்காப்புத் துறையும் வெளியுறவு அமைச்சும் அதிபரின்கீழ் செயல்படும்.

சீனா, ‘ஒரே நாடு, இரு செயல்முறைகள்’ என்ற திட்டத்தை தைவானுக்கு வழங்கியது. ஆனால் அதனை தைவானின் எந்த அரசியல் கட்சியும் ஏற்கவில்லை. தைவான் அதிபர் லை சிங்-டெ சீனாவின் பரிந்துரையை திட்டவட்டமாக நிராகரித்தார்.

இரண்டாம் உலகப் போரின் மரபை சீனா சிதைக்கிறது என்று தைவான் அரசாங்கம் தொடர்ந்து குறைகூறி வருகிறது.

அண்மையில் ஜப்பானியப் பிரதமர் சானேய் தக்காய்ச்சி, சீனா தைவானைத் தாக்கினால், ஜப்பான் பதிலடி தர நேரிடும் என்று நாடாளுமன்றத்தில் கூறியது அந்த வட்டாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்