தைப்பே: இந்தோ பசிபிக் வட்டாரத்தை அமெரிக்கா கைவிடுவது சாத்தியமில்லை என்று தைவானியத் தற்காப்பு அமைச்சர் வெலிங்டன் கூ தெரிவித்துள்ளார்.
தேசிய நலன் தொடர்பாக அமெரிக்கா முக்கியத்துவம் கொடுப்பவற்றில் இந்தோ பசிபிக் வட்டாரமும் அடங்கும் என்று அவர் கூறினார்.
அண்மையில் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஜோ பைடன் அமெரிக்க அதிபராக இருந்தபோது ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட்டு வரும் உக்ரேனுக்கு அமெரிக்கா நிதி, ஆயுத உதவிகளைப் பேரளவில் வழங்கியது.
ஆனால் தற்போது அதிபர் டிரம்ப், அதிபர் ஸெலென்ஸ்கி இடையிலான உறவு கசந்துள்ளது.
இந்நிலையில், தைவானைத் தனது ஒரு பகுதியாக சீனா கூறி வருகிறது.
தன்னை ஒரு தனி நாடாக அடையாளப்படுத்திக்கொள்ளும் தைவான் சீனாவின் நிலைப்பாட்டை ஏற்க மறுக்கிறது.
பைடன் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் தைவானுக்கு ஆதரவு தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் தற்போது அதிபர் டிரம்ப்பின் ஆதரவு கிடைக்குமா என்ற கவலை மேலோங்கி இருக்கிறது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் திங்கட்கிழமை (மார்ச் 4) பேசிய திரு கூ, இந்தோ பசிபிக் வட்டாரம், தைவான் நீரிணை, தென்சீனக் கடல் ஆகிய இடங்களில் அமைதியை நிலைநாட்டுவது அமெரிக்காவுக்குப் பலனைத் தரும் என்று தெரிவித்தார்.
எனவே, தைவானின் விவகாரத்தில் அமெரிக்கா கண்டும் காணாமலும் இருந்துவிட முடியாது என்றார் அவர்.
இந்தோ பசிபிக் வட்டாரத்தில் அமைதியும் நிலைத்தன்மையும் நிலவினால் அது அமெரிக்காவுக்கு பொருளியல், புவிசார் அரசியல் ரீதியாகப் பலனளிக்கும் என்றும் திரு கூ தெரிவித்தார்.
தைவானை ஆதரித்து அதற்கு ஆயுதங்கள் வழங்கும் முக்கிய நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது.