தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தைவான்: போருக்கு எதிராக ஒன்றிணைந்து போரிடுவோம்

2 mins read
f59db7b1-e35c-4d04-a4af-a19a9d76619b
தைவான் அதிபர் லாய் சிங்-தேயை வரவேற்ற ஹாவாய் ஆளுநர் ஜோஸ் கிரீன். - படம்: ராய்ட்டர்ஸ்

தைப்பே: போரில் வெற்றியாளர் என்று ஒருவரும் இல்லை என்று கூறியுள்ளார் தைவான் அதிபர் லாய் சிங்-தே.

அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றான ஹாவாய் தீவுக்குச் சென்றுள்ளார் தைவான் அதிபர் லாய். அவரது இந்தப் பயணம் சீனாவுக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், திரு லாய் ஹாவாயில் உள்ள அமெரிக்க கப்பற்படைத் தளமான பேர்ல் துறைமுகம் 1941ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி தாக்கப்பட்டபோது உயிரிழந்தவர்களுக்கான நினைவிடத்தைப் பார்வையிட்டார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், போரில் வெற்றியாளர் யாரும் இல்லை. ஆனால், அமைதியே விலைமதிப்பற்றது என்று கூறியுள்ளார்.

தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா கூறி வருவதோடு இந்தப் பிரச்சினையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தலையிடுவதையும் சீனா விரும்பவில்லை. இந்நிலையில் தைவான் அதிபர் லாய், சீனாவுக்குச் சினமூட்டும் வகையில் இரண்டு நாள்கள் அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டு ஹாவாய் தீவுக்குச் சென்றுள்ளார்.

தைவானின் நட்பு நாடுகளான மூன்று ஆசிய பசிபிக் தீவு நாடுகளுக்குச் செல்லும் வழியில் திரு லாய், ஹாவாய்க்குச் சென்றதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஹாவாய் அரசியல்வாதிகள் மற்றும் அங்கு வாழும் தைவான் நாட்டைச் சேர்ந்த மக்களையும் அவர் சந்தித்துப் பேசினார். அப்போது, அரிசோனாவில் போரில் உயிரிழந்தவர்களுக்கான நினைவிடத்திற்குச் சென்று மலர் வளையம் வைத்தது குறித்து உருக்கமாகப் பேசினார்.

போரில் உயிரிழந்தவர்களின் நினைவிடங்கள் அமைதியின் முக்கியத்துவத்தையே நமக்கு உணர்த்துகின்றன. அதனால், போரில் வெற்றியாளர் என யாரும் இல்லை. அதேநேரத்தில் அமைதி எப்போதும் விலைமதிப்பற்றதாகவே இருக்கிறது. நாம் போரிட வேண்டும், ஒன்றிணைந்து போரிட வேண்டும். அதாவது போர் மூளாமல் தடுக்கவே நாம் போரிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவரது உரை தைவான் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

குறிப்புச் சொற்கள்