பெரிய அளவில் சீன ராணுவ நடவடிக்கைகள் நடப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை: தைவான்

பெரிய அளவில் சீன ராணுவ நடவடிக்கைகள் நடப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை: தைவான்

1 mins read
cdd06b40-ce9c-4380-a3e3-055264e8ca5a
தேர்தல் நெருங்கிவரும் வேளையில், தீவைச் சுற்றி சீனப் போர் விமானங்களும் கப்பல்களும் இருப்பதாக தைவான் கூறியது. - படம்: ராய்ட்டர்ஸ்

தைப்பே: அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, பெரிய அளவில் சீன ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கான அறிகுறிகளைப் பார்க்கவில்லை என்று தைவான் கூறியுள்ளது.

இருப்பினும், சீனாவை அணுக்கமாகக் கவனித்துவருவதாக தைவானின் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

தைவானில் ஜனவரி 13ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிபர், நாடாளுமன்றத் தேர்தல், பெய்ஜிங்குடன் அத்தீவு கொண்டுள்ள உறவுகளை நிர்ணயிக்கும்.

தைவானுக்கு நெருக்குதல் கொடுத்து தனது அரசுரிமையை நிலைநாட்டும் நோக்கில், சீனா அண்மைய ஆண்டுகளில் தைவானைச் சுற்றி ராணுவப் பயிற்சிகளை நடத்தி வருகின்றது. இருப்பினும், தைவான் சீனாவின் அரசுரிமைக் கோரிக்கைகளை நிராகரித்துவருகிறது.

தேர்தல் நெருங்கிவரும் வேளையில், தீவைச் சுற்றி சீனப் போர் விமானங்களும் கப்பல்களும் இருப்பதாக தைவான் கூறியது.

“இதுவரை சீனா பெரிய அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான அறிகுறிகள் இல்லை. அதற்காக நாளையோ நாளை மறுதினமோ ஒன்றும் நடக்காது என்று சொல்வதற்கில்லை,” என்று தைவான் தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் சுன் லி ஃபாங் செய்தியாளர்களிடம் கூறினார்.

“என்ன நடக்கிறது என்பதை இரவுபகலாகக் கண்காணித்து வருகிறோம்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்